பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
கிருஷ்ணகிரி: திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடந்தது.
கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த மகோற்சவ மகாபாரத விழா, கடந்த மாதம், 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், நேற்று முன்தினம் (மே., 12ல்) வரை தினமும் மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை, நாகமங்கலம் ஆசிரியர் வரதனின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது.
அதேபோல் கடந்த மாதம், 29 முதல் தினமும் இரவு, 9:00 மணி முதல், கிருஷ்ணகிரி பூந் தோட்டம் செல்வவினாயக நாடக சபா குழுவினரின் தெருக்கூத்து நாடகம் நடந்து வந்தது. நேற்று முன்தினம் (மே., 12ல்) இரவு, துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் துவங்கி, நேற்று (மே., 13ல்) காலை, 10:00 மணி வரை நடந்தது.
இதில், துரியோதனனாக காந்தியும், பீமனாக சுரேசும் போர்க்களத்தில் துரியோதனனை எதிர்த்து பீமன் சண்டையிடும் காட்சியை நடித்துக் காண்பித்தனர். பின்னர் துரியோதனின் தொடையில், பீமன் கதாயுதத்தால், அடித்து வீழ்த்தும் காட்சி நடந்தது.
நிகழ்ச்சியில், பாப்பாரப்பட்டி, தொன்னைகான் கொட்டாய், சவுளூர், பாறையூர், கெட்டூர், தண்டேகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மற்றும் ஊர் கவுண்டர்கள் செய்திருந்தனர்.