பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
சேலம்: சஞ்சீவி ஆஞ்சநேயர், சென்றாய பெருமாள் கோவில்களில் நடந்த முப்பூஜையில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விஷ்ணுபதி கமிட்டி சார்பில், மூன்று தமிழ் மாதங்களுக்கு ஒருமுறை, முக்கிய கோவில் களில், விஷ்ணுபதி புண்யகால பூஜை நடத்தப்படுகிறது. அதையொட்டி, சேலம், சஞ்சீவிராயன் பேட்டை, சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில், கணபதி யாகத்துடன் விஷ்ணுபதி புண்யகால பூஜை, நேற்று (மே., 15ல்) காலை தொடங்கியது.
யாகத்தில், 11 கலசம் வைத்து, வீடு கட்டுவதில் உள்ள சிக்கல் தீர, வாஸ்து பூஜை; திருமண தடைகளை நீக்க, சுயம்வரா பார்வதி யாகம்; ஆரோக்கியத்தை அள்ளித்தரும், மிருத்யுஞ்ஜெய் யாகம்; உலக நன்மைக்கு, மகா சுதர்சன யாகம் நடத்தி, புனிதநீரால், மூலவர் விநாயகர், சஞ்சீவி ஆஞ்சநேயர், தசாவதார பெருமாள் உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப் பட்டது.
தொடர்ந்து, தமிழ் மாத பிறப்பு சிறப்பு பூஜை, வளர்பிறை ஏகாதசி பூஜை செய்து, விஷ்ணுபதி பூஜையில் பங்கேற்றவர்களுக்கு, பிரசாதம், ஏழு வகை சாதங்களை, அன்னதானமாக வழங்கினர். அதேபோல், காளிப்பட்டி, சென்றாய பெருமாள் கோவிலில், வைகாசி பிறப்பு, வளர்பிறை ஏகாதசி, விஷ்ணுபதி புண்யகால பூஜையையொட்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, கல் தூணில் திருக்கோடி தீபமேற்றி வழிபாடு நடந்தது.
திருக்கல்யாணம்: சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், வைகாசி தேர்த்திருவிழா, கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று (மே., 15ல்) காலை, சிறப்பு திருமஞ்சனம், பூஜை நடந்தது. மாலை, திருக்கல்யாணம் நடந்தது. அழகிரிநாத பெருமாள் சமேத சுந்தரவள்ளி தாயார் மணக்கோலத்தில் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஊர்வலம்: இடைப்பாடி அருகே, வேம்பனேரி, அய்யனாரப்பன் கோவில் சுவாமி, சித்திரை, வைகாசியில், 200 ஆண்டுக்கு மேலாக, ஏழு ஊருக்கு, பக்தர்கள், ஊர்வலமாக தூக்கிச்செல்வர். நடப்பாண்டு ஊர்வலம், நேற்று முன்தினம் (மே., 14ல்) மாலை நடந்தது. அதில், தங்க கீரிடத்து டன் குதிரை வாகனத்தில் அய்யனாரப்பனை எழுந்தருளச்செய்து, ஊர்வலம் தொடங்கியது. இரண்டாம் நாளாக, நேற்றும் (மே., 15ல்), வேம்பனேரியில், ஊர்வலம் நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், சுவாமியை ஊர்வலமாக தூக்கிச்சென்றனர். அப்போது, அந்தந்த கிராம மக்கள், தரிசனம் செய்தனர். இன்று (மே., 16ல்), ஊர்வலம் நிறைவடையும்.
பொங்கல் விழா: கெங்கவல்லி அருகே, நடுவலூர், புத்து மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழாவையொட்டி, நேற்று, (மே., 15ல்)திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.
நேர்த்திக்கடன்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி பாலமுத்து கருமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பல்வேறு வித அலகுகுத்தி, முக்கிய வீதிகளில், ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், உற்சவர் பாலமுத்து கருமாரியம்மனை, முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரச்செய்தனர்.