பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
தர்மபுரி: தர்மபுரி அடுத்த சேமனஹள்ளி அக்குமாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழா, 12 கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இதை முன்னிட்டு, கடந்த, 10ல், அம்மனு க்கு கொலு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (மே., 14ல்) திரளான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று (மே., 15ல்) காலை, 7:00 மணிக்கு, அம்மன் தலை கூடுதல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. 10:00 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்தி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (மே., 16ல்) காலை, 8:30 மணிக்கு, 12 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, தீச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மே., 17ல்) மாலை, 7:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வரும், 23ல், எருதாட்டமும், 24ல், அம்மன் வீடு திரும்பும் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பாலக்கோடு இந்து சமயம அறநிலையத்துறை ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் அறங்காவலர் செந்தில்குமார் உட்பட, விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.