பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
அரூர்: தீர்த்தமலையில் உள்ள மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்த கிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக, முதியவர்கள் மலை ஏற மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதேபோல், நீராடி விட்டு வரும் பெண்களுக்கு, உடைகள் மாற்ற அறைகள் எதுவும் இல்லாததால், அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சேதமான பாதையை சீரமைப்பதுடன், பெண்கள் உடை மாற்ற வசதி செய்து தர வேண்டும். மலை அடிவாரத்தில் பூட்டியுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.