பதிவு செய்த நாள்
17
மே
2019
11:05
சபரிமலை, -சபரிமலையில், கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. லட்சார்ச்சனை, குழந்தைக்கு சோறு ஊட்டுவது என, சன்னிதானம் களை கட்டுகிறது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வைகாசி மாத பூஜைகளுக்காக 14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.
மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடை திறந்து, தீபம் ஏற்றி, பக்தர்களுக்கு திருநீறு வழங்கினார். 15-ம் தேதி காலை முதல், நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன.நேற்று சிறப்பு பூஜையாக, லட்சார்ச்சனை நடந்தது. மதியம், களபம் மற்றும் கலச பூஜை நடந்தது. பூஜிக்கப்பட்ட களபம் மற்றும் கலசம், அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அனைத்து நாட்களிலும், இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடக்கிறது. வைகாசி மாத பூஜைகள், 19-ம் தேதி முடிவடைந்து, அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.