பதிவு செய்த நாள்
17
மே
2019
11:05
திருப்பூர்: விண்ணதிரும் சிவகண வாத்திய இசையுடன், பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சிதந்து, திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நேற்ற வெகு விமரிசையாக நடந்தது.
முஞ்சூறு வாகனத்தில் விநாயகர்; வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வாணை சமேத சண்முகசுப்பிரமணியர்; அதிகார நந்தி வாகனத்தில் சோமாஸ்கந்தர்; ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.நேற்று இரவு 8:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், சிவ கண வாத்தியங்களுடன், 63 நாயன்மார்கள் வரிசையாய் நிற்க, பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தனர். தொடர்ந்து, நந்திக்கொடி பறக்க நாயன்மார்கள் முன்செல்ல, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஸ்ரீவீரராகவப்பெருமாளும், தாயார்களுடன், கருடவாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எருந்தருளினர். புஷ்ப அலங்கார வளைவுகளுடன், பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவமூர்த்திகள், வாண வேடிக்கையுடன், மின்னொளியில் திருவீதியுலா சென்ற போது, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.