பதிவு செய்த நாள்
17
மே
2019
11:05
மடத்துக்குளம்: மைவாடி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது.மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்டது மைவாடி. கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். நுாறு ஆண்டுக்கும் மேலாக நடக்கும் இந்த விழாவில், தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும்.இந்தாண்டு சித்திரை திருவிழா, ஏப்., 30ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் விழா தொடங்கியது. பூவோடு வைத்த பின்பு, கம்பம் நடப்பட்டது.
பின்னர், அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிேஷகம் நடந்தது. தீர்த்தம் செலுத்துதல், சக்தி கும்பம் எடுத்தல், ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பிறகு, நேற்று முன்தினம், திருக்கல்யாணம் நடந்தது.நேற்று, காலை மாவிளக்கு, பூவோடு எடுத்தல், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பின், மதியம், 3:00 மணிக்கு, தேரோட்டம் தொடங்கியது.கோவில் வாசலில் வழிபாட்டுக்கு பின், மக்கள் இழுத்து செல்ல விநாயகர் கோவில் பகுதியில் சிறப்பு பூஜை செய்தனர். அடுத்து, மைவாடியின் முக்கிய தெருக்கள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. இன்று மதியம் 1:00 மணிக்கு மகா அபிேஷகத்துடன் விழா நிறைவடைகிறது.