பதிவு செய்த நாள்
20
மே
2019
01:05
கேதார்நாத்: கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. தியானத்தை ஊக்குவிப்பதற்காக, மோடியின் பரிந்துரைபடி, குகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவும் முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக அனைத்துக்கட்சிகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். 17 மணி நேரம் அவர் தியானம் செய்தார். தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், கேதார்நாத்தில் இக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குகை, இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். பிரதமர் மோடி தங்கிய குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ரூ.3,000 என குகைக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பயணிகள் வருகை குறைவால் சரியாக முன்பதிவு ஆகாமல் இருந்தது. குகை திறக்கப்பட்ட நேரம், அதிக குளிர் நிலவும் நேரம். மேலும் முன்பதிவு 3 நாட்களுக்கு முன்னரே செய்ய வேண்டியிருந்தது. எனவே குகைக்கு பயணிகள் அதிகம் வரவில்லை. இதனையடுத்து பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் ஆலோசித்து, குகையின் வசதிகளை மேம்படுத்தி, வாடகையையும், ரூ.990ஆக குறைக்க, நடவடிக்கை எடுத்தார்.
குகையில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் மூன்று வேளை உணவு, இரண்டு நேரம் டீ, வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனியாக தங்கியிருக்கும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், எந்நேரமும் உதவிக்கு அழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி, இதில் எவ்வித வசதிகளையும் எடுத்துக் கொள்ளாமல், 17 மணி நேரம் குகையில் தியானம் செய்துள்ளார்.