கோவில்பாளையம் : சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட காலகாலேஸ்வரர் கோவிலில் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை என பக்தர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கோவில்பாளையத்தில், பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது.இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்குள்ள தட்சிணா மூர்த்தி கோவை மாவட்டத்திலேயே பெரியதாகும். இக்கோவில் குறித்து திருப்பணி கமிட்டி முன்னாள் நிர்வாகி மரகதம் பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திற்கு அனுப்பிய புகாரில் கூறியுள்ளதாவது: காலகாலேஸ் வரர் கோவில் வளாகத்தில் தேங்கி நிற்கும் நீரால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை.வளாகத்தில் உள்ள சுவாமி சிலைகள் தினமும் முறையாக கழுவப்படுவதில்லை. சுவாமி துணிகள் மாற்றப்படுவதில்லை. ஹோமம் அபிஷேகம் செய்ய வரும் சேவார்த்திகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.நடை திறப்புக்கு பின் குறிப்பிட்ட நேரங்களிலும், குரு ஹோரையிலும் அபிஷேகம் நடைபெறு வதில்லை. பணி நிறைவு பெற்ற அர்ச்சகர் தொடர்ந்து இதே கோவிலில் பணிபுரிந்து வருகிறார். மாற்றுப்பணியாளர் இருந்தும் தொடர்ந்து அவரே பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்புகார் குறித்து கோவில் செயல் அலுவலர் ஜெய செல்வம் கூறுகையில்,கோவிலில் தூய்மை பணிக்கு, இரு பணியாளர்கள் உள்ளனர். வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது.மரங்கள் அதிகமாக உள்ளதால், சில நேரம் காய்ந்த இலைகள் கோவில் வளாகத்தில் விழும். நீர் தேங்கி நிற்பது சரி செய்யப்பட்டு விட்டது. ஒரு அர்ச்சகர் மட்டும் நிரந்தர ஊழியர். மற்றொருவர் தின சம்பள அடிப்படையில் பணிபுரிகிறார். குறிப்பிட்ட நேரங்களில் பூஜை நடக்கிறது, என்றார்.