பதிவு செய்த நாள்
30
மே
2019
01:05
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் மஹாபாரத திருவிழா கடந்த, 8ல், கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, மஹாபாரத சொற்பொழிவும், கொல்லாபுரி அம்மன் நாடக சபா கூச்சானூர் ராஜாவின் தெருக்கூத்து நாடகமும் நடந்து வந்தது. இதன் இறுதிநாளான நேற்று (மே., 29ல்), 18ம் நாள் போர் துரியோதனன் படுகளம் நாடக நிகழ்ச்சி நடந்தது.
நாடக கலைஞர்கள் அம்மனை வேண்டி, கிராமத்தை சுற்றிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டும் சென்றனர். பின்னர், துரியோதனன், பீமன் சண்டையில், துரியோதனன் இறப்பது போல் நாடக குழுவினர் நடித்து காண்பித்தனர். மேலும், பாஞ்சாலி சபதம் முடிக்கும் வகையில் துரியோதனனை படுகளம் செய்து அவன் ரத்தத்தில் கூந்தலை அள்ளி முடிக்கும் வைபவம் நடந்தது.
பின்னர், திரவுபதி அம்மனை வீதி உலா எடுத்துச்சென்று கங்கையில் நீராடி, சிறப்பு பூஜைகளும் செய்தனர். இதையடுத்து மாலையில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். விழாவில், சந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.