பதிவு செய்த நாள்
31
மே
2019
12:05
திருப்பத்தூர்: நெக்குந்தியில் சோழர்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி கூறியதாவது: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, நெக்குந்தியில் உள்ள வனப்பகுதியில், வேடியப்பன் என்ற பெயரிட்டு, ஒரு கல்லை அப்பகுதி மக்கள் வழிபட்டு
வருகின்றனர். இந்த கல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 10ம் நூற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்த நடுகல் என தெரியவந்தது.
திறந்த வெளியில் ஒன்னரை அடி பூமியில் புதைந்துள்ள இந்நடுகல் இரண்டு அடி உயரம் உள்ளது. பலகை கல்லில் மூன்று அடி அகலத்திற்கு அழகாக இதில் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. அதில், வீரன் ஒருவன் வலது புறம் கொண்டையிட்டு கொண்டு, கையில் வில், அம்பு வைத்திருக்கின்றான். காதுகளில் காதணி அணிந்து கொண்டும், முதுகுபக்கம் அம்புக் கூடு, கழுத்தில் வீர கடக்கன் அணிந்து கொண்டுள்ளான். இதன் மூலம் இப்பகுதியில் நீண்ட நாட்கள் போர் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. உருவம் சிதையாமல் இதுபோல, மேலும் பல நடுகல் இப்பகுதியில் புதைந்திருக்கலாம். தொல் பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வு
செய்தால் வரலாற்று உண்மைகள் நிறைய வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, ஆங்கில பேராசிரியர் மதன், காணிநிலம் முனிசாமி உடனிருந்தனர்.