பதிவு செய்த நாள்
31
மே
2019
03:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில், மூன்று நாள் தேரோட்டம் நேற்று துவங்கியது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இரவு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நேற்று மாலை, 5:35 மணிக்கு, புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட, 15 அடி உயர தேரில், நீல நிற பட்டுடுத்தி அம்மன் எழுந்தருளினார். தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் கோஷம் முழங்க, ஆடி அசைந்து வலம் வந்த தேர், கிழக்கு ரத வீதியில் முதல் நாள் நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்று, கோவிலின் மேற்கு ரத வீதியிலும், மூன்றாவது நாளான நாளை, கோவில் முன்பகுதியில் நிலை நிறுத்தப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு, கோவிலை சுற்றியுள்ள, 18 கிராமங்களும் திருவிழா கோலம் பூண்டன. விழா துவங்கிய நாளில் இருந்து, காலை மற்றும் மாலை நேரங்களில், சிறப்பு அலங்காரத்தில், அம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.