திண்டிவனம்: திண்டிவனம் - மயிலம் மாநில நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக புதையுண்ட கர்வெர்ட் தோண்டியெடுக்கப்பட்டது.திண்டிவனம் - மயிலம் மாநில நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 12 மீட்டர் அகலம் கொண்ட மாநில நெடுஞ்சாலை 17 மீட்டராக மாற்றப்பட்டுள்ளது. விபத்தினை தடுக்க நடுவில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நெடுஞ்சாலையில் இரண்டு இடங்களில் கல்வெர்ட் பாலங்களும், ஒரு பெரிய பாலமும் குறுக்கிடுகிறது. பெரிய பாலத்திற்கான பூர்வாங்க பணிகள் துவங்கிய நிலையில் சிறிய கல்வெர்ட் பாலத்திற்கான பள்ளம் தோண்டும் பணி துவங்கியது.மயிலம் ரோடு ஜே.பி.எஸ்., சக்தி மகால் அருகே சிறிய கல்வெர்ட் பாலம் தார்சாலை போடப்பட்ட பிறகு மண்ணில் புதைந்து போனது.தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிக்காக இந்த இடத்தை தோண்டியபோது, கல்வெர்ட் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், கல்வெர்ட் பாலம் உள்ள இடத்தில் சாலையின் அகலம் தற்போது இருபுறமும் 8.5 மீட்டராக உள்ளது.
இதனை 3 மீட்டர் கூடுதலாக இருபுறமும் அகலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அத்துடன் புதையுண்ட பாலம் வழியாக வெள்ளம் வழிந்தோடி நகராட்சி வாய்க்காலில் கலக்க உள்ளது. இதன் மூலம் சாலை அகலமாவதோடு, மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்காது என்றனர்.