பதிவு செய்த நாள்
03
ஜூன்
2019
01:06
ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி மலைக்கோயிலில் மீண்டும் தனியார் அன்னதான மடங்கள் செயல்பட அறநிலையத்துறை அனுமதிக்ககோரி இந்துமுண்ணனி அமைப்பினர் 35 கி.மீ தூரம் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின் நலன்கருதி ஏழு தனியார் அன்னதான மடங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. ஆனால், இவற்றால் சுற்றுசூழல் மாசுபடுவதாக கூறி, அம்மடங்கள் செயல்பட அறநிலையத்துறை அனுமதி மறுத்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில மாதங்களாக போதிய குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் பணீந்திர ரெட்டி, நேரடி ஆய்வு செய்தும், இதுவரை இப்பிரச்னையில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சதுரகிரியில் மீண்டும் அன்னதான மடங்கள் செயல்பட அனுமதிக்ககோரியும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தி தரக்கோரியும் விருதுநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் 35 கி.மீ தூர பாதயாத்திரை நேற்று (ஜூன்., 2ல்) நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆனந்த விநாயகர் கோயில் முன்பு இருந்து நேற்று (ஜூன்., 2ல்) காலை 6:40 மணிக்கு துவங்கிய பாதயாத்திரையை, மாவட்ட தலைவர் மூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட பொதுசெயலர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் யுவராஜா, ராஜா மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.