பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
ராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்றது.சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட வானர வீரர்களுக்குப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
அப்போது இந்திரனிடம், "இந்த அற்புதமான தருணத்தில்
மகாத்மாவான ஆஞ்சநேயரிடம் இந்திராதி தேவர்கள் ஆசீர்வாதம் பெற வேண்டும். எனவே, அவரை அழைத்து வா! என்றார். பிரம்மதேவர். ராம சேவையில் ஈடுபட்டிருந்த ஆஞ்சநேயர் வரவில்லை. அதனால், ராமரைப் பணிந்து, "ஆஞ்சநேயரை அருள் கூர்ந்து வரச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் இந்திரன். பிறகு ராமரின் உத்தரவால், இந்திரனிடம் வந்து, "என்ன விஷயம்? என்று கேட்டார் ஆஞ்சநேயர்.
"மகா பாக்கியவானான ஆஞ்சநேயரே! ராமர் அவதாரத்தில் தாங்கள் பிரதான அங்கம் வகித்தவர். வேத -சாஸ்திரங்களை அறிந்தவர். சங்கீத விற்பன்னர். அஷ்டமா ஸித்திகள் பெற்றவர். நவ வியாகரண பண்டிதர். ராமரின் ஆசியையும், சீதாதேவியின் அன்பையும் பெற்றவர். பரத -சத்ருக்னனின் உயிர்களைக் காப்பாற்றியவர். சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் அரசுரிமை பெற்றுத் தந்தவர். பணிவின் உறைவிடம். நைஷ்டிக பிரம்மசார்யான தாங்கள். இந்தப் பட்டாபிஷேக வேளையில் தங்களது திருவாக்கினால் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்! என்று வேண்டினான் இந்திரன்.
"தேவேந்திரரே, தாங்கள் குறிப்பிட்ட இவ்வளவையும் செய்வதற்கான சக்தி எனக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற உண்மையைச் சொல்கிறேன். முனிவர்களில் சிறந்த யாக்ஞவல்கியர், சூரிய பகவானிடம் வேத -வேதாந்தங்கள் படித்தார். நானும் அதே போல் படிக்கச் சென்றேன். அப்போது சூரிய பகவான், "ஆஞ்சநேயா... என் வெப்பத்தைத் தாங்க முடியாததால் என்னிடம் உன்னால் பாடம் படிக்க
முடியாது. யாக்ஞவல்கியன் என்ற என் சிஷ்யன் ஜெகன்மாதா காயத்ரிதேவி அருளால் என்னிடம் வேதங்கள் கற்றுக் கொண்டான். என்னிடம் கற்க வந்த உனக்கு "ஹரி ஓம் உபதேசித்துப் பாடத்தை ஆரம்பிக்கிறேன். மீதியை யாக்ஞவல்கியரிடம் கற்றுக் கொள்! என்றார். யாக்ஞவல்கியரிடம் மற்றவற்றைக் கற்றுக் கொண்டேன்.
அவர்தான் ஜனக மகராஜாவுக்கும் குரு. அவரது கருணையால்தான் சீதாபிராட்டி, ஜனகருக்குப் புதல்வியானார். பின், ராமச்சந்திர மூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார். என் குருவின் திருவருளால் எனக்கு ராம சேவை செய்யும் பாக்கியம் ஏற்பட்டது.
எனவே நீங்கள் யாக்ஞவல்கியரை சரணடையுங்கள். அவர் அருளும் ஆசியும் கிடைக்குமானால், அதுவே நான் ஆசி கூறியதற்குச் சமம்! என்று கூறினார் ஆஞ்சநேயர்.
"யாக்ஞவல்கியரை சரணடைவது எப்படி? என்று கேட்டான் இந்திரன்.
"ஓம் யோகீச்வர யாக்ஞவல்கிய குருவே நம: (ஓம் -பிரணவம், ஸ்ரீ
-சக்தி, யோகீச்வரர் - சிவன்) என்று கூறுங்கள், யாக்ஞவல்கி என்றால், மகாவிஷ்ணு என்று பொருள். குரு என்பது பிரம்மா. இதை ஒரு முறை சொன்னால் நமது மொத்தப் பாவங்களும் அழியும்! என்றார் ஆஞ்சநேயர். அவர்கள் அவ்வாறே துதிக்க, மகரிஷியான யாக்ஞவல்கியர் ஆகாயத்தில் தோன்றி, அங்கிருந்த அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் பெரிதும் மகிழ்ந்தனர். ஆஞ்சநேயரின் நேர்மையைப் போற்றினர்!