பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
அஷ்ட மங்களம் என்றால் எட்டு விதமான மங்களங்கள் என்று பொருள். அஷ்ட மங்களம் என்பது நம்முடைய மதத்தில் இறைவழிபாட்டுக் காலங்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான அடையாளச் சின்னங்களாகும்.
இந்துமதம் அல்லாது திபெத்திய, ஜைன, பவுத்தத்திலும் சில
வேறுபாடுகளுடன் அஷ்ட மங்களப் பொருட்கள் உண்டு.
வைணவ ஆகமங்கள் இரண்டு வகை, அவையானவை.
1. பஞ்சராத்திரம்
2. வைகாநஸம்.
பாஞ்சராத்திர மரபுப்படி அஷ்டமங்கள பொருள் எவை என்பதும் அவற்றின் மகிமைகளையும் இங்கே காணலாம்-
1. ஸ்ரீவத்ஸம்
2. பூர்ணகும்பம்
3. பேரிகை
4. தர்ப்பண மண்டலம்
5. இரட்டை மீன்கள்
6. சங்கு (சங்கம்)
7. ஸ்ரீசக்கரம்
8. காஷ்யப நந்தனம் (கருடன்)
1. ஸ்ரீவத்ஸம்: ஸ்ரீவத்ஸம் என்பது திருமறு. மறுவடிவில் மாதவனின் மார்பில் உறையும் திருமகள் இருப்பிடத்தைக் குறிப்பதாகும்.
பாற்கடலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவள் திருமகள். தேவர்கள் பாற்கடலைக் கடையும் போது ஐராவதம், உச்சைஸ்வரவஸ் என்ற குதிரை, காமதேனு இவைகளுடன் பாற்கடலிலிருந்து தோன்றியவள் திருமகள். எல்லாவற்றிலும் நிகர் இல்லாதவராக விளங்கிய மகாவிஷ்ணுவைத் தன் பதியாகக் கொண்டு அவர் திருமார்பில் உறைந்தவள்.
திருமாலை விட்டு என்றும் விலகாத அவள் இருந்த இடம், தழும்பேறி மறுவானது, அந்த மறுவே ""ஸ்ரீவத்ஸம் என்று அழைக்கப்படுகிறது.
2. பூர்ண கும்பம்: பூர்ண கும்பம் என்றால் ""நிறைகுடம் என்று பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான பொருட்களைக் குடத்தில் போட்டு நீர் நிரப்பி, குடத்தில் வெளிப்புறத்தில் நூல் சுற்றி, அதன் மேல் சந்தனம், மஞ்சள், குங்குமம் முதலான பொருட்களால் அலங்கரித்து, பட்டாடையைச் சுற்றி, குடத்தின் வலப்புறத்தில் மாவிலைக் கொத்து செருகி, அதில்
பூர்ணமான தேங்காயை வைத்து அலங்கரித்து வைப்பது பூர்ணகும்பம் ஆகும்.
லட்சுமியின் அம்சமான இது மங்களம், வளம் இவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மன்னர்களுக்கும், ஞானிகள், மகான்கள், மடாதி பதிகளுக்கும், வழங்கப்பட்ட பூர்ண கும்ப மரியாதை, இப்போது
உயர்ந்த பட்டம், பதவியில் இருப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
3. பேரிகை: பேரிகை என்றால் "பறை . இது ஒரு இசைக்கருவி. இதில் எழும் ஒலி துஷ்ட சக்திகளை விரட்டக் கூடியது. கோயில்களில் பூஜையின் போது, மங்கள ஆரத்தி நடைபெறும்போது வாசிக்கப்படும் வாத்தியங்களில் ஒன்று, இதைப் பறை என்னும் பேரிகை என்று சொல்வதுண்டு.
பூஜையின் போது தனிநபர்கள் தன்நிலை மறந்து அமங்கலச் சொற்களைச் சொல்லும்போது அந்த மங்கல ஒலி பூஜையின் இடையே அசவுகரியத்தை ஏற்படுத்தாமல் இருக்க பேரிகை முழக்கப்படுகிறது. பேரிகையில் ஒலிக்கும் மங்களமான ஒலி அமங்கல ஒலியை அகற்றி விடும்.
4. தர்ப்பண மண்டலம்: தர்ப்பணம் என்று இதைக் கூறுவர், இது ஒரு பெரிய கண்ணாடி. திருமால் சன்னதியில், திருமால் எதிரே இருக்கக் கூடியது. பொதுவாகக் கண்ணாடியில் நம் முகத்தை நாம் பார்த்தால் நம்முடைய பிரதிபிம்பம் தெரியும். அதாவது நாமே அதில்
தோன்றுவோம். வேறு எதுவும் தோன்றாது. ஆதி சங்கரர் தனது விவேக சூடாமணியில் கூறுகிறார்.
"யத்ரைஷ ஜகபாதாஸோ தர்ப்பணாந்தபுரம்
யதாஸத் ப்ரஹ்மாஹமிதி ஜ்நாத்வா
க்ருதக்ருத்யோ பவிஷ்யஸி
ஒரு கண்ணாடியில் ஒரு நகரத்தின் பிரதிபலிப்பைக் காண்பது போல நீயே பிரம்மம், இதை உணர்ந்து விட்டால் பூர்ணத்துவம் பெறுவாய்,
பிரபஞ்சமே உள்ளிடத்தில் பிரதிபலிக்கிறது என்பது இதன் பொருள்.
கோயில் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் திருமால் தன்
உருவத்தைப் பார்த்து தன் அழகை ரசித்துக் கொள்ள வைக்கப்படுகிறது. அவர்தான் அனைத்தும் என்பதை உணர்த்தவே இந்தக் கண்ணாடி.
5. இரட்டை மீன்கள்: ஒன்றுக்கு ஒன்று இணையான ஒன்றை ஒன்று பார்க்கும்படி அமைக்கப்பட்ட இரண்டு மீன்கள். இரண்டு மீன்கள் ஒன்று - ஜீவாத்மா மற்றொன்று -பரமாத்மா.
மீன்கள் நீரில் மட்டுமே வசிக்கக் கூடியவை. கரையில் இருந்தால் இறந்து விடும். அதாவது மீன் நீரை விட்டுப் பிரியாது. அது போல ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஐக்கியப் பட்டிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.
நாம் இறைவனை வழிபடும்போது நம் ஜீவாத்மா உடன் உள்ளிருக்கும் பரமாத்மாவும் ஒன்றிணைந்து வழிபட வேண்டுமென்பது பொருள்.
6. சங்கம் (சங்கு): சங்கம் என்றால் சங்கு, வெண்மையானது. தூய்மையானது. ஓங்கார ஒலியை எழுப்பக்கூடியது. இதன் நாதம் வேதமாக வருவதாகும். எப்போதும் திருமால் சங்கு சக்கரத்தைப் பிரியாதிருப்பார்.
சங்கு - 1.வலம்புரி, 2. இடம்புரி என்ற இரண்டு வகைகளில் காணப்படும். இதுவும் மங்களச் சின்னம்.
பாற்கடலில் மகா லட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது. வலம் புரிச்சங்கு மகாவிஷ்ணுவின் இடது கையில் இருப்பது. வலம்புரிச் சங்கில் ஓம்கார நாதம் தன் இயல்பாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
7. ஸ்ரீசக்கரம்: வட்ட வடிவத்தில் சுலபமாக உருண்டோடக் கூடிய ஒரு பொருள் சக்கரம். காலத்தைச் சக்கரம் என்பர். சூரியன் அதைச் செலுததுவதாகக் கூறுவர். சக்கரம் காலத்தின் தத்துவம். இதனை ""சக்கரத்தாழ்வார் என்பர். திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாகக் கருதப் பெறுகிறார். திருமால் திருக்கோயில்களில் சக்கரத் தாழ்வாருக்கெனத் தனிச்சன்னிதி காணப் பெறுகிறது. சக்ராயுதம் என்பது விஷ்ணுவின் ஆயுதமாகும். திருமால் எப்போதும் தன் திருக்கரத்தில் ஸ்ரீசக்கரத்தை ஏந்திய நிலையில் தரிசனம் அளிப்பார்.
8. காஷ்யபந்தனம் (கருடன்): காஷ்யப முனிவருக்கும் விநதாவுக்கும்
பிறந்தவர் கருடர். இவர் ""கருடாழ்வார் என்றும் ""பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் திருமாலின் வாகனம், திருமால் சன்னதியில் எதிரே இருக்கக் கூடியவர். திருவிழாவில் கருடோத்சவம் மிகச் சிறப்புப் பெற்றது.
கருடன் பராக்கிரமம் உடையவர். தன் சகோதரர்களுக்காக அசுரர்களிடம் போர் புரிந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வந்தவர்.
கருடன் எப்பொழுதும் வைகுந்தத்தில் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்.
பறவைகளின் அரசன் கருடன், வேதமே உருவானவர். கருடர் ஒளிமயமானவர். நாகத்தை ஆபரணமாகப் பூண்டவர். வைகுந்தத்தில் இவர் பகவானின் கண்ணாடியாக நிற்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் தான் விஷ்ணுவின் கோயில் புறப்பாடு சமயத்தில் கண்ணாடிச் சேவை நடைபெறுகிறது.
வைணவ வைபவங்களான கும்பாபிஷேகம், யாக காலங்களில் மேலே குறிப்பிட்ட அஷ்ட மங்களப் பொருட்கள் மகாகும்பத்தைச் சுற்றி வைக்கப்பட்டு முறையாக பூஜை செய்யப்படும்போது அஷ்ட மங்களத்துக்கு உரிய சக்தி மகாகும்பத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. மகாகும்ப நீர் கோபுரக் கலசத்தில் ஊற்றப்படும் போது அந்தச் சக்தி இறைவனை சேர்க்கிறது. எங்கும் பரவும் அந்த சக்தியின் மூலமாக இறைவன் தன் பக்தர்களைக் காப்பாற்றுகிறான்.