பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
04:06
திருமாலுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய கைங்கர்யங்களை செய்துகொண்டு இருப்பவர்களை நித்யசூரிகள் என்பர். அத்தகையவர்களுள் அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் போன்றோர் முக்கியமானவர்கள். அனந்தனை, ஆதிசேஷன் என்று போற்றுவர். திருமாலுக்கு சகலவிதங்களிலும் கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றவர். இவரை முதலாழ்வாரான பொய்கையாழ்வார் தம் பாடலில்.
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம், மணிவிளக்காம் பூம்பட்டாம், புல்கும்
அணையாம் திருமாற்கரவு.
என்று ஆதிசேஷன் திருமாலுக்குச் செய்யும் கைங்கர்யங்களைத் தெரிவிக்கிறார். ஆதிசேஷன், ஆயிரம் தலை கொண்டவர். மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் திருமாலிடம் போரிட வந்தபோது தனது ஆயிரம் வாய்களாலும் விஷ ஜ்வாலையைக் கக்கி, அரக்கர்கள் திருமாலை நெருங்க முடியாதபடி தடுத்தவர். தசாவதாரங்களில் திருமால் ராமாவதாரம் எடுத்தபோது ராமபிரானின் தம்பியாகிய இலக்குவனாய் அவதரித்து சேவை செய்தார். அந்த சேவையினைக் கண்ட திருமால், கிருஷ்ணாவதாரத்தில் தான் அவருக்கு சேவை செய்யும் முகமாக பலராமனாக அவதரிக்கச் செய்து மனம் மகிழ்ந்தான். தானே பல அவதாரங்களை எடுத்தும், தனது சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்களையும் நிலவுலகில் ஆழ்வார்களாக அவதரிக்கச் செய்தும் மக்களை நெறிப்படுத்த முடியவில்லையே என்று மனம் நொந்து ஆதிசேஷனையே ராமானுஜராக அவதரிக்கச் செய்தார், மகாவிஷ்ணு. ராமானுஜர் தன் உபதேசம் மூலம் திருமால் நெறியை செம்மைப்படுத்தி மக்கள் மனதில் ஓர் மாற்றம் ஏற்பட வழி செய்தார்.
ராமனின் அம்சமாகவே நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் அவதரிக்க, அவர் வாசஸ்தலமாக புளியமரமாய் அவதரித்ததும் ஆதிசேஷனே. ராமானுஜரின் முதன்மைச் சீடனாக ராமனின் அம்சமாக அவதரித்தவர் ஸ்வாமி முதலியாண்டான். அவருக்கு தாஸரதி என்ற திருநாமமும் உண்டு. இவரை ராமானுஜரின் பாதுகைகள் என்று வைணவம் போற்றுகிறது. இவரின் வம்சத்தில் வந்த கந்தாடையாண்டன் என்பவர்தான் ராமானுஜரின் திவ்யமங்கள திருவுருவை ஸ்ரீபெரும்புதூரில் நிர்மாணித்தவர். முதலியாண்டான் ஸ்வாமியே ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜருக்கு சடாரியாக விளங்குகிறார். அதனால் அங்கு முதலியாண்டானுக்கு தனி சன்னதி கிடையாது. ராமானுஜருக்கு திருமால் 200 வருட ஆயுட்காலம் அளித்த போதிலும், 120 வயதிலேயே தன் வயோதிகத்தை முன்னிட்டு இறையுடன் இணைந்தார். எனினும் அரங்கனின் திருவுள்ளப்படி அவரே மீண்டும் மணவாள மாமுனிகளாக அவதரித்து ராமானுஜர் விட்டுச் சென்ற சில கைங்கர்யங்களை செய்து முடித்தார் என்கிறது வரலாறு. மேலும், அவர் அரங்கனுக்கே ஆசார்யனாகவும் விளங்கும் பேற்றினைப் பெற்றார். ஆதிசேஷனுக்கு சோழ நாட்டு திவ்ய தேசமான சிறுபுலியூரிலும், சென்னையை அடுத்த திருநின்றவூரிலும் தனிச்சன்னதி அமைந்துள்ளது. ஆதிசேஷனையும் ராமானுஜரையும் பக்தியுடன் பூஜிப்பவர்களுக்கு சர்ப்பதோஷங்கள் விலகும். மேலும், சரும வியாதிகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.