அதிமதுரக் கவிராயர் ஒரு முறை கவிகாளமேகத்திடம், ஒரே வெண்பாவில், தசாவதாரங்களையும் அடக்கிப் பாடுமாறு கூற, கவியோ, "பத்து அவதாரத்துக்கு ஒரு வெண்பா வேண்டுமா, அரை போதுமே! என்று பாடலைப் பாடினார்.
"மெச்சு புகழ் வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுன் சென்மமெடுக்கவா - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்.
கூடியிருந்த பிற புலவர்கள், ""மாகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய் - என்ன இதெல்லாம்? எனக் கேட்க, காளமேகம் விளக்கினார்.
மெச்சுபுகழ் வேங்கடவா, வெண்பாவில் பாதியில் என் விருப்பப்படி உன் ஜன்மங்கள் (அவதாரங்கள்) பத்தையும் கூற அருள்வாயாக.
மச்சா, கூர்மா, கோலா (வராஹா) சிங்கா (நரசிங்கன்) வாமா (வாமனன்) ராமா (பரசுராமா) ராமா (தசரதராமா) ராமா (பலராமா) கோபாலா (கிருஷ்ணா) மா ஆவாய் (இனி கல்கியாக அவதரிப்பாய்) என்று பொருள் உரைக்க, அவை ஆர்ப்பரித்தது.