குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் கிராமத்தில் குசேலர் பிறந்ததால் அக்காலத்தில் அது சுதாமாபுரி எனப்பட்டது. கிருஷ்ணலீலைகளைப் பார்த்து மகிழும் பொருட்டு நாரத முனிவரே, மது காரோசனா தம்பதிக்கு சுதாமா என்ற மகனாக அவதரித்தார் என்று கூறுவர். சுதாமாவுக்கு அவர் பிறந்த கிராமததில் 12, 13-ம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்ட கோயிலை கிராம மக்கள் திருப்பணி செய்து விரிவுபடுத்தினர். சுதாமாவுக்கு இந்தியாவில் அமைந்துள்ள ஒரே கோயில் எனும் சிறப்பும் இதற்குண்டு. ராஜஸ்தான் மாநில க்ஷத்திரிய வம்சத்தினர் மணமானவுடன் தம்பதியராக இத்தலத்திற்கு வந்து வழிபடும் மரபுள்ளது.
கோயில் நுழைவாயிலில் சுதாமாபுரி யாத்ரா தாம் என்ற பெயரைத் தாங்கிய வரவேற்பு வளைவு உள்ளது. 50 தூண்களைக் கொண்ட விசாலமான மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறையில் சுதாமாவும் அவருக்கு இடப்புறம் அவரது மனைவி சுசீலாவும், வலப்புறம் கிருஷ்ணரும் அமர்ந்த நிலையில் காட்சிதருகின்றனர். கருவறைக்கு மேலே வட இந்திய பாணியில் உயரமான விமானம் உள்ளது. கோயிலைச் சுற்றிலும் அழகான நந்தவனமும், கோயில் வளாகத்தில் சுதாமா பயன்படுத்திய கிணறும் உள்ளன. இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சந்தியா ஆரத்தி நடைபெறும். காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கு "தாமாஜீ தண்டுதல் (குசேலரின் அவல்) என்ற மகாபிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதை உண்பவர்களுக்கு செல்வளம் பெருகும். ஆனந்த வாழ்வு ஏற்படும் மற்றும் மகப்பேறு வேண்டுவோருக்கு அது கிட்டுமென்பது நம்பிக்கை. இந்தியா முழுவதும் அட்சய திருதியை நாளை குசேலர் தினமாக அனுஷ்டிக்கின்றனர்.