மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராம், ராம், பலராம், கிருஷ்ண, கல்கி என பத்து அவதாரம் எடுத்தவர் பத்மநாபனான விஷ்ணு. இவை ஒவ்வொன்றிற்கும் விசஷேமான நோக்கம் உண்டு. மீனாக வந்து நான்குவேதங்களைக் காத்தருளினார். ஆமையாக வந்து தேவர்கள் அமுதம் பெற துணை செய்தார். பன்றி வடிவெடுத்து அசுரர்களிடமிருந்து பூமியைக் காத்தருளினார். நரசிம்மராக அவதரித்து எங்கும் தான் இருப்பதை நிலைநாட்டினார். வாமனராக எழுந்தருளி மகாபலியின் ஆணவத்தை அடக்கினார். நீதி மறந்த மன்னர்களை பரசுராமராய் வந்து அழித்தார். தந்தை சொல்லைக் காப்பாற்ற ராமராக வில்லேந்தி நின்றார். தம்பிக்காக கடமையாற்ற பலராமனாக பாடுபட்டார். தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணராக அருள்புரிந்தார். கலியுகத்தின் பாவக்கொடுமை தீர, முந்தைய கலியுகங்களில் வந்து அருள் செய்தார். இந்த கலியுகத்திலும் வந்து அருள்புரிவார்.