பதிவு செய்த நாள்
18
ஜூன்
2019
03:06
கேரளாவிலுள்ள இடுக்கியில் பிறந்தவர் ஸ்ரீநாத். ஏழ்மையால் இவர் அதிகம் படிக்கவில்லை. ரயில்வே துறை நடத்திய சுமை தூக்கும் உடல் வலிமைக்கான தேர்வில் பங்கேற்று ’போர்டர்’ லைசென்ஸ் பெற்று எர்ணாகுளத்தில் பணிபுரிந்தார். எப்போதும் ரயிலுக்காகக் காத்திருக்க வேண்டும் அல்லது பயணிகளின் சுமையைத் தூக்க காத்திருக்க வேண்டும். தற்காலத்தில் சக்கரம் வைத்த ’ஸ்ட்ரோலர்’ வந்த பின் அவரவர் பெட்டிகளை அவர்களே இழுத்துச் செல்கிறார்கள்.
அவருடைய மனம் ஒருநாள் விழித்தெழுந்தது. எத்தனை காலம் குடும்பத்தின் பாரம் சுமக்க, மற்றவர் பாரத்தை தலையில் சுமப்பது என யோசித்தார். ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதி அரசு பணியில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. அதற்கான புத்தகங்களை வாங்கவோ, கோச்சிங் சென்டரில் சேரவோ வாய்ப்பு இல்லை.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். ஸ்மார்ட் போனும், ஹெட் போனும் அவரிடம் இருந்தது. ரயில்வே ஸ்டஷேனில் இலவசமாக வை–பை (ஙிடிஊதூ) வசதி இருந்தது. இவற்றைக் கொண்டு என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டார். இணைய தளத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பிற்கான பாடங்கள் வாய்ஸ் பைல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. தலையில் மூடையைத் தூக்கும் போது, இணையதளத்தில் ஐ.ஏ.எஸ்., பாடங்களை ஹெட்போன் மூலம் கேட்டு மனதில் வாங்கிக் கொள்வார். இப்படியே தேர்வு எழுதி வெற்றி பெற்றார்!
நேரம் தான் கடவுள் நமக்கு அளித்த அரிய சொத்து. சற்று யோசியுங்கள். உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்சுக்கும் ஒரு நாள் 24 மணி நேரம் தான். நமக்கும் அதே நேரம் தான். இதுவே நம் மூலதனம். பணம் கொடுத்து வாங்க முடியாத நேரத்தை ஆக்கவழிகளில் ’மூலதனம்’ செய்வது பற்றி யோசிக்க வேண்டும். விழித்தெழுந்த மனம் தான் இதைச் செய்யும். ஸ்ரீநாத்தின் மனமும் இதைச் செய்தது. காத்திருக்கும் நேரத்தில் குறிக்கோளை அடைய தேர்வுக்கான பாடங்களைக் கேட்கலாம் என அவரது மனம் வித்தியாசமாக யோசித்தது. ’காத்திருந்தேன்; காத்திருந்தேன்; காலமெல்லாம் காத்திருந்தேன்; காத்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனியுமம்மா!’ என்ற சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது. காத்திருக்கும் நேரம் எல்லாம் நமது வாழ்வின் ஒரு அங்கம் தான். நாம் நூறாண்டு ’இருக்கிறோம்’ என வைத்துக் கொள்ளுங்கள். இந்த
நூறாண்டும் ’வாழ்கிறோமா’ என யோசியுங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பதில் உள்ளது.
“வேதநூல் பிராயம் நூறு, மனிசர் தாம் புகுவரலேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற தனி பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே”
வேதம் சொல்வது போல மனிதன் நூறாண்டு வாழலாம்.
அதில் பாதி நேரம் அதாவது 50 ஆண்டுகள் தூங்குகிறோம். மீதியிருக்கும் ஐம்பதில் முதல் 15 ஆண்டு உலகைப் பற்றி அறியாமல் இருக்கிறோம். மீதி 35 ஆண்டுகளில் உடல்நலக்குறைவு, பசி, முதுமை, உலக வாழ்வில் துன்பத்தை அனுபவிக்கிறோம். ஆக மொத்தம், முழுமையாக வாழ்ந்ததாக யாரும் சொல்ல முடியாது எனவே பிறக்காமல் இருக்க விரும்புகிறேன்.
வாழ்வின் நிலை பற்றி சொல்கிறது இப்பாடல். ’இதில் பாதி உறங்கிப் போகும்’ என்பதில் முக்கிய கருத்து ஒளிந்திருக்கிறது. ’உறக்கம்’ என்பது இரவில் உறங்குவது என கருதுவோம். உண்மையில், நம்மைச் சுற்றி நிகழும் மாற்றம் என்ன, அதற்கேற்ப எப்படி தயாராக வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலையும் உறக்கம் தானே?
’ நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்; சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என அலட்டிக் கொண்டார்; விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்; உன் போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்’ என்னும் பட்டுக்கோட்டையார் பாடலும் நினைவில் எழுகிறது. உடல் ஓய்வு பெறுவதற்காக தூங்க வேண்டும். தூங்கும் போது நமக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாது. விழித்திருக்கும் போதும் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் பலர் இருக்கின்றனர். ’என்ன கவனிக்காமல் தூங்கினாயா’ என்று சிலரிடம் கேட்போமே...அதுவும் உறங்கும் நிலை தானே? இப்போது தூங்குகிறீர்களா அல்லது விழித்திருக்கிறீர்களா என்பதை அறிய இந்த ஏழு கேள்விக்கும் பதில் எழுதுங்கள்
1. நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள்? எந்த டிப்பார்ட்மெண்டில்?
2. உங்களுக்கு இப்போது கிடைக்கும் சம்பளம் என்ன?
3. சம்பளத்தை நிர்ணயிப்பது எது? உங்களின் படிப்பு, திறமை, அனுபவம் குறித்த விபரம்?
4. ஒருவேளை உங்களின் பணியை ராஜினாமா செய்தாலோ, அல்லது உங்களின் சேவை தேவையில்லை என நிறுவனம் சொன்னாலோ, இப்போது வாங்கும் சம்பளத்தில் மற்றொரு வேலை கிடைக்குமா? ஆம் எனில் எத்தனை நாட்களில்?
5. ஒருவேளை வேறு வேலை கிடைத்து உங்களின் நிறுவனத்திலிருந்து விலகினால், உங்கள் நிறுவனத்தில் உங்களைவிட குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆள் கிடைக்குமா?
6. உங்களின் படிப்பு, திறமைக்கு வேறு நிறுவனத்தில் இப்போதை விட அதிக சம்பளத்தில் வேலை கிடைக்குமா?
7. உங்களின் திறமை, அனுபவத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் மதிப்பு இருக்கும்?
நெருப்பு என்றால் வாய் சுடாது. கேள்விகளுக்கு உண்மையான பதிலை எழுதுங்கள். பிறகு உங்களை நீங்களே கேளுங்கள்,’ நான் விழித்திருக்கிறேனா?’ என்று.
’வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்னும் குறள் நினைவிருக்கலாம். அடுத்த ஐந்து ஆண்டில் நம் வாழ்வில் என்ன மாற்றம் வரும்? அவை எப்படி பாதிக்கும்? அதற்காக என்ன ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என கேட்டுக்கொள்ளுங்கள். இப்படி கேட்டால் மனம் விழித்தெழும். ஒரு மனிதர் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினார். ஆனால் அவருக்கு சோதனை வந்தது. உடனே விழித்துக் கொண்டார்! அதனால் பிழைத்துக் கொண்டார்! அவர் யார் என்ன நடந்தது என்பதை அறிய ஆவலுடன் விழித்திருங்கள்.