பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
தஞ்சாவூர்: தஞ்சை மேலவீதியில் விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தஞ்சை காசிவிஸ்வநாதர் கோவில் மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமைக்குரியது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில், இந்த கோவிலும் ஒன்றாக திகழ்கிறது. காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுக்காலை ஒன்பது மணிக்கு நடந்தது. சிறப்பு பூஜைகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் மேற்கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் கருந்தட்டான்குடி சுந்தரேச சிவாச்சாரியார் மற்றும் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கு பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ் லே தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், ரங்கராஜ், குணசேகரன், செயல் அலுவலர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். விசாலாட்சி உடனாய காசி வி ஸ்வநாதர் ஸ்வாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 14ம் தேதி அநுக்ஞை தேவதா தனபூஜை, 15ம் தேதி நவக்கிரஹஹோமம், 16ம் தேதி திரவிய ஹோமம், 17ம் தேதி மூலவர் பரிவாரமூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 18ம் தேதி யாக பூஜை, விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஸ்வாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை, மஹா அபிஷேகம் ஆகியவையும், தொடர்ந்து சுவாமி திருவீதியுலாவும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் இணைந்து செய்திருந்தனர்.