பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
11:06
விழுப்புரம்: திண்டிவனம் - புதுச்சேரி வழியில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 23.6.19 ஞாயிற்று கிழமை காலை 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இத்தலத்தை பற்றி பாப்பாகுடி வெங்கடேச பட்டாச்சாரியார் கூறுகையில், இந்த பஞ்சவடீ க்ஷேத்திரமானது சித்தர்கள் முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். எனவே தான், தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாதபடி பஞ்சமுகத்தில் மேற்கே அனுமார், கிழக்கே கருடன், தெற்கே வராகர், வடக்கே நரசிம்மர், மேலே ஹயக்கிரீவர் என ஐந்து முகம், பத்து திருக்கரங்களில் பத்து வித ஆயுதத்துடன் கூடிய 36 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் விக்ரஹமும், மகாகணபதி, பட்டாபிஷேக ராமர் விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய கோயில் கட்டப்பட்டுள்ளது.
36 லட்சம் மந்திர ஜபம்: இங்குள்ள ஆஞ்சநேயர் சிலையானது, மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தில் பிரபலமான ஸ்தபதி திரு முச்த்தையா அவர்களால் வடிவமைக்கப்பட்டு 2003 ஜூன் 12ம் தேதி பஞ்சவடீயில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து 2007ல் ஜன. 31ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தின் போது,ஆஞ்சநேயர் திருவுருவச்சிலையின் அடிப்பாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் மூலமந்திரத்தை 36 லட்சம் தடவை ஜபம் செய்து, 3,60,000 தடவை ஹோமம் செய்து, உரு ஏற்றப்பட்ட அரை கிலோ சுத்த தங்கத்தாலான எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பம்சமாகும். மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் தவிர, பஞ்சலோகத்தால் ஆன ஐந்து அடி உயரம் மற்றும் மூன்று அடி உயரத்தில் உற்சவர் பஞ்சமுக ஆஞ்சநேயரும் வைக்கப்பட்டு திரிபேர ஆராதனையுடன், வைகானஸ ஆகம விதிப்படி பூஜை செய்யப்படுகிறது. மூலவரின் மேல் உள்ள விமானம் 198 அடி உயரத்தில் ஒரு கலசத்துடன் அமைந்துள்ளது. ஆஞ்ஜநேயருக்கு எதிரில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலை ஐந்து கலசங்களுடன் அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள சந்தன மரத்தால் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்ட ராமரின் பாதுகைகள் மிகவும் விஷேசமானது. ஏனென்றால், இந்த பாதுகை 108 திவ்ய தேசத்தில் 106 திவ்ய தேசங்களில் பூஜை செய்யப்பட்டு உரு ஏற்றப்பட்டதாகும்.
லிப்ட் மூலம் அபிஷேகம் : இங்கு அனுமன் ஜெயந்தி ஐந்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 1008 லிட்டர் பாலால் லிப்ட் மூலம் அபிஷேகம் செய்யப்படுவதை காண்பது கண்கொள்ளா காட்சியாகும். மேலும் மூங்கில் கூடைகளில் பூக்கள் நிரப்பி புஷ்ப விருஷ்டி எனப்படும் அபிஷேகமும் செய்யப்படுகிறது. ராம நவமி ஐந்து நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் இங்குள்ள வலம்புரி மகா கணபதிக்கு விநாயகர் சதுர்த்தி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் முடியுமாறு பவித்ர உற்சவமும் இங்கு பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யப்பப்பட்ட 10 ரூபாய், 5 ரூபாய், ஒரு ரூபாய் காசுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை தங்களது இல்லத்தில் வைத்தால் செல்வவளம் பெருகி, பஞ்சம் தீரும் என்பது நம்பிக்கையாகும்.
அறுசுவை நைவேத்யம்: இக்கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம். 7 மணிக்கு காலசந்தி பூஜை நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு 4 அண்டாக்களில் சுவையான வெண்பொங்கல் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் அலங்கார தளிகை எனப்படும் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல், பச்சடி, பாயாசம் ஆகிய அறுசுவை உணவை நுனி வாழை இலையில் போட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. அதன் பின் நடை சாற்றப்படுகிறது. மாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு நித்தியானு சந்தான கால பூஜையின் போது பானகம், தோசை, சுண்டல், சர்க்கரை கலந்த அவல் படைக்கப்படுகிறது. 6 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 8 மணிக்கு குங்குமப்பூ, ஏலம், இனிப்பு கலந்த, காய்ச்சப்பட்ட ஐந்து லிட்டர் பால், நெய்யில் பொறிக்கப்பட்ட ஒரு கிலோ முந்திரி, ஒரு கிலோ உலர் திராட்சை, ஒரு கிலோ கற்கண்டு ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு அர்த்த சாம பூஜையுடன் கோயில் நடை சாற்றப்படுகிறது. இங்கு பூஜை நேரத்தில் வரும் பக்தர்களுக்கு தொன்னையில் சுவையான பிரசாதம் வழங்கப்படுகிறது. அத்துடன் தினமும் பகல் 12 மணிக்கு சுமார் 200 பக்தர்களுக்கு நுனி வாழை இலை போட்டு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
தினமும் திருக்கல்யாணம்: திருமணத்தில் தடை உள்ளவர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தி இங்கு தினமும் காலை 11 மணிக்கு நடக்கும் சீதா ராமர் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு கோயில் சார்பாக பிரசாதம் கொடுக்கப்படுகிறது. திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக இங்கு வந்து நன்றி கூறி செல்கின்றனர். அதே போல் அஷ்டமத்துசனி, ஏழரை சனி, கண்ட சனி போன்ற சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இங்கு வந்து ராம ரட்சை எனப்படும் சிவப்பு முடிகயிறு கட்டிக்கொண்டு ஏழு சனிக்கிழமைகள் அனுமனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷ பாதிப்பு குறையும் என பலனடைந்த பக்தர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கு தற்போது இரண்டாவது முறையாக நாளை 23.6.2019 ஞாயிற்று கிழமை காலை 9.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
பஞ்சவடீ செல்ல இலவச பஸ் வசதி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, புதுச்சேரி, கடலுார், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவையொட்டி பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி தொண்டு நிறுவனத்தால் பக்தர்களின் வசதிக்காக இலவச பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச பஸ்கள் காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மாலையில் நடக்கும் சீதா திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் இயக்கப்பட உள்ளது. புதுச்சேரி இந்திரா சிலை, முருகா தியேட்டர் மற்றும் சப்தகிரி ஓட்டல் (பஸ் நிலையம்) ஆகிய பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் மேம்பாலம் புதுச்சேரி சாலை, ( பழைய தமிழ்நாடு அரசு விரைவு பஸ் நிலையம் ), கூட்டேரிப்பட்டு மற்றும் மயிலம் பஸ் நிலையம், கிளியனுார், கீழ்புத்துப்பட்டு, கழுப்பெரும்பாக்கம் மற்றும் பூத்துறையில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். கடலுார் மாவட்டத்தில், கோழியூர், திட்டக்குடி மற்றும் பூத்தேரி ஆகிய இடங்களில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூவத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென் கீரனுார் பகுதியில் இருந்து இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. பஞ்சவடீ கோவில் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் துாரத்தில் பஞ்சவடீ உள்ளது. கார் மற்றும் பைக்குகளில் வருவோர், திண்டிவனம் நெடுஞ்சாலையில் புளிச்சப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில், சாலையை வலதுபுறமாக கடந்து, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சர்வீஸ் சாலையில் சென்றால் பஞ்சவடீயை அடையலாம்.
மத்திய திருப்பதி: மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலத்தில், திருமலை திருப்பதியில் உள்ள மலையில் இருந்து எடுத்த கல்லினால் செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்ட ஸ்ரீவாரி வெங்கடாசலபதியின் திருவுருவச்சிலை திருப்பதியில் இருப்பதைப்போலவே நின்ற கோலத்தில் ராமர் சன்னதி எதிரில் மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபட்டு பலன் பெறலாம் என்கிறார்கள். இந்த கும்பாபிஷேகத்தில் நாமும் கலந்து கொண்டு பஞ்சமுக ஆஞ்ஜநேயரின் பரிபூரண அருளைப்பெறுவோம்.
நேரடி ஒளிபரப்பு: தினமலர் இணையதளம் முக்கிய நிகழ்வுகளை எப்போதுமே வாசகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி வருகிறது. நாளை 23.06.2019 திண்டிவனம் -புதுச்சேரி வழியில் அமைந்துள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகள் காலை 9.00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை (www.dinamalar.com)ல் தரிசித்து மகிழலாம்.