தி.பூண்டி முள்ளாச்சி அம்மன் கோவிலில் தீமிதித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 11:03
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவில் 68வது ஆண்டு தீ மிதித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருத்துறைப்பூண்டி நகரின் முள்ளியாற்றின் வடகரையில் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து அருள் பாலித்து வரும் முள்ளாச்சி மாரியம்மன் திருவிழா கடந்த நான்காம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினம்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு அன்னவாகனம், புஷ்பவாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்திருவிழா நேற்று அதிகாலை நடந்தது. நான்கரை மணி முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடிகள் எடுத்து வந்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். பின்னர், மாலை ஆறு மணியளவில் சந்நிதி முன், நிறுத்தப்பட்டு இருந்த தீக்குழியில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானேர் பால் குடம் எடுத்து வந்து தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். நாளை (20ம் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது. ஏற்பாட்டை கோவில் செயல்அலுவலர் நீதிமணி, தக்கார் மதியழகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.