பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நேற்று கருடசேவை உற்சவம், கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6 மணிக்கு சப்பர உற்சவம், மாலை 6 மணிக்கு சிம்ஹ வாகனம் உற்சவம் நடந்தது. இரண்டாம் நாள் காலை ஹம்ஸ வாகனம், மாலை சூர்ய பிரபை உற்சவம் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை 6 மணிக்கு பிரபல உற்சவமான கருடசேவை, வெகு விமரிசையாக நடந்தது. மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, டி.கே.நம்பி தெரு, செட்டித் தெரு, மாட வீதிகளை வலம் வந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாலை ஹனுமந்த வாகனம் உற்சவம் நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான 22ம் தேதி காலை 7.30 மணிக்கு, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மறுநாள் 22ம் தேதி பகல் 2 மணிக்கு, தொட்டித் திருமஞ்சனம், மாலை குதிரை வாகனம், 24ம் தேதி காலை ஆல்மேல் பல்லக்கு, தீர்த்தவாரி, மாலை வேதசார விமானம், 25ம் தேதி காலை த்வாதசாராதனம், மாலை வெட்டவேர் சப்பரம், த்வஜ அவரோஹணம், ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.