அளவுக்கு மீறி பேசும் பெண்களை ’வாயாடி’ என மாப்பிள்ளை வீட்டார் புறக்கணிக்க வாய்ப்புண்டு. இவர்கள் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள தெக்கம்பட்டி வனபத்ரகாளியை தரிசிக்க நல்வாழ்வு கிடைக்கும்.
அசுரனான மகிஷன் என்பவன் உயிர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழிக்க எண்ணிய பார்வதி, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சிலகாலம் தங்கி சிவனிடம் தவமிருந்தாள். தவபலத்தால் பத்ரகாளியாக வடிவெடுத்த அவள், அசுரனைக் கொன்றாள். பின் இத்தலத்தில் குடிகொண்டாள். ஒருமுறை ஆரவல்லி, சூரவல்லி என்னும் பெண்கள், பாண்டவரில் ஒருவரான பீமனைச் சிறை பிடித்தனர். கிருஷ்ணரின் தலையீட்டால் அவர் விடுவிக்கப்பட்டார். தன் பெரியப்பாவை சிறைப்பிடித்த பெண்களை பழிவாங்கத் துடித்தான் அர்ஜூனனின் மகனான அபிமன்யு. பல இடங்களில் அவர்களை தேடினான். வழியில் இக்கோயிலைக் கண்டான். கோரிக்கையை அம்மனிடம் தெரிவித்தான். மந்திர வாளை பரிசளித்த காளி, பெண்களை அடக்க வரமும் அளித்தாள். அப்பெண்களை அடக்கினான் அபிமன்யு. வாயாடி பெண்கள் காளியை வழிபட்டால் அடக்கம், அமைதி, பொறுமை உண்டாகும். கன்னியருக்கு வாழ்க்கைத்துணையும், மணமானவருக்கு குழந்தை வரமும் கிடைக்கும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா நடக்கும். முதல் செவ்வாயன்று அம்மனிடம் அனுமதி பெறுவதும், இரண்டாம் செவ்வாயன்று 36 அடி நீளத்தில் குண்டம் அமைத்து தீ மிதிப்பதும் விழாவும், மூன்றாம் செவ்வாயன்று மறுபூஜையும், அடுத்து வரும் செவ்வாயன்று சிறப்பு பூஜையும் நடக்கும்.