பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
03:06
சென்னை – புதுச்சேரி செல்லும் வழியில் கேளம்பாக்கம் வழியாகச் செல்லும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMகீ) உள்ள திருத்தலம் திருப்போரூர். இங்கு முருகன் கோயில் அமைய காரணமானவர் சிதம்பர சுவாமி.
மதுரையைச் சேர்ந்த இவர், குமாரதேவர் என்னும் துறவியை விருத்தாசலத்தில் சந்தித்தார். இருவரும் கோவையை அடுத்துள்ள பேரூர் சாந்தலிங்க சுவாமியை தரிசிக்கச் சென்றனர். அங்கு ’சிதம்பரத்தை சீடனாக ஏற்று தீட்சை கொடு’ என குமார தேவருக்கு கட்டளையிட்டார் சாந்தலிங்கர். குமார தேவரும் சீடனாக ஏற்றார். ஒருநாள் சிதம்பர சுவாமி தியானத்தில் இருந்த போது, மயில் ஒன்று நடனமாடக் கண்டார். இது குறித்து குமார தேவரிடம் விளக்கம் கேட்டார். ”மதுரைக்குச் சென்று, அன்னை மீனாட்சியை வழிபடு.
அதற்கான விடை கிடைக்கும்’ என்றார். சிதம்பரசுவாமியும் மீனாட்சியை தரிசித்து 45 நாட்கள் விரதமிருந்தார். அம்மன் மீது ’மீனாட்சி கலிவெண்பா’ பாடினார். கனவில் காட்சியளித்த மீனாட்சி, ” திருப்போரூர் என்னும் தலத்தில் பூமிக்கடியில் முருகன் சிலை புதைந்து கிடக்கிறது. அதை வழிபாட்டுக்கு உரியதாக செய்” என உத்தரவிட்டாள். சிதம்பர சுவாமி திருப்போரூர் கிளம்பினார். ’முருகன் கோயில் எங்கு உள்ளது?’ என்று ஊராரிடம் விசாரித்தார். ’முருகன் கோயிலா இங்கில்லையே...வேம்படி விநாயகர் கோயில் தான் இருக்கிறது’ என தெரிவித்தனர்.
அக்காலத்தில் இப்பகுதி பனங்காடாக இருந்தது. இருந்தாலும் விநாயகர் கோயிலில் குடில் அமைத்து தங்கினார். அருகில் உள்ள வள்ளையார் ஓடையில் நீராடி, விநாயகரை வழிபட்டு முருகன் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.
ஆறு நாட்கள் முடிந்தது. ஏழாம் நாள் காலையில் ஒரு பனை மரத்தின் அடியில் சுயம்பு வடிவில் முருகன் சிலை கிடைக்க, ஆனந்தக் கூத்தாடினார். முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தார்.
ஒருநாள் முருகனுக்கு அபிஷேகம் செய்த போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.
குருநாதரான குமாரதேவரின் வடிவில் முருகன் அங்கு வந்தார்.
”ஐயனே! அன்னை மீனாட்சியின் ஆணைப்படி, முருகனின் கோயிலைக் கண்டுபிடிக்கவே இந்த ஊரில் தங்கியுள்ளேன்’ எனத் தெரிவித்தார். அப்போது குருநாதர் வடிவில் இருந்த முருகன் திருநீறு பூச, புதிதாக அமையவுள்ள முருகன் கோயில் காட்சியாக தெரிந்தது. உடனே குருநாதர் மறைந்தார். வந்தவர் முருகப்பெருமானே என உணர்ந்த சிதம்பர சுவாமி, கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். மக்களும் பொருளுதவி செய்தனர்.
இக்கோயிலின் மூலவர் ’கந்தசுவாமி’ என அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியான இவருக்கு அபிஷேகம் நடப்பதில்லை. வாசனை திரவியமான புனுகு மட்டும் சாத்தப்படும்.
சுவாமிமலை, திருத்தணி போலவே இங்கும் யானை வாகனம் உள்ளது. வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதிகள் உள்ளன. நவராத்திரியின் போது வள்ளி, தெய்வானைக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது.
முருகனின் 300 திருநாமங்கள் பொறிக்கப்பட்ட யந்திரம்
இங்குள்ளது. முருகனுக்கு பூஜை முடிந்ததும், இந்த யந்திரத்துக்கும் பூஜை செய்வர்.
கருவறையில் முருகனின் முன்பு இரண்டு மந்திர சக்கரங்களை
சிதம்பரசுவாமி பிரதிஷ்டை செய்தார். காஞ்சிப்பெரியவர் இத்தலத்திற்கு வந்த போது, மந்திர சக்கரங்களைக் கைகளால் தொட்டு, ’சக்தி மிக்க இந்த சக்கரங்களை வழிபட்டு அனைவரும் நலம் பெறுங்கள்” என அருள்புரிந்தார்.
’திருப்போரூர் சன்னிதிமுறை’ என்னும் 726 பாடல்களைக் கொண்ட நூலை முருகன் மீது சிதம்பரசுவாமி பாடினார். ’அறுபடை வீடுகளைத் தரிசித்த பலனை ஒருமுறை திருப்போரூர் கோயிலை தரிசித்தாலே பெறலாம்’ எனத் தெரிவித்தார். திருப்போரூர் அருகிலுள்ள கண்ணகப்பட்டு என்னும் இடத்தில் மடம் நிறுவிய அவர், 1659ம் ஆண்டு வைகாசி விசாக நாளில் ஸித்தி அடைந்தார். இதன்பின் திருப்போரூர் கோயிலில் சிதம்பர சுவாமிக்கு சன்னதி கட்டப்பட்டது.