பதிவு செய்த நாள்
28
ஜூன்
2019
02:06
தர்மபுரி: முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பங்கேற்று, நேற்று (ஜூன்., 27ல்) பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். தர்மபுரி அடுத்த அளே தர்ம புரியில், குழந்தை முனியப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலின், இந்த ஆண்டுக்கான சிறப்பு வழிபாட்டு பூஜை, நேற்று முன்தினம் (ஜூன்., 26ல்) துவங்கியது. காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஜூன்., 27ல்) காலை, 10:00 மணிக்கு, சுவாமி நிலத்தில் பால்குடங்கள் வைத்து, வழிபாடு செய்யப்பட்டது. பின், இக்கோவிலில் இருந்து, அளே தர்மபுரி வழியாக, ராமக்காள் ஏரிக்கரை யில் உள்ள குழந்தை முனியப்பன் கோவிலுக்கு, திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, இக்கோவில் வளாகத்தில், பல்வேறு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. மேலும், பக்தர்கள் கொண்டு வந்த பல்குடங்களை கொண்டு, குழந்தை முனியப்பன் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.