40 ஆண்டுகளுக்கு பின் வந்தார் அத்திவரதர்: 48நாள் தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2019 11:06
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் வைபவம் வரும் திங்கள் கிழமையன்று துவங்க உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. முன்னதாக கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்த தண்ணீரை கிழக்கு கோபுரம் அருகே இருக்கும் பொற்றாமரை குளத்திற்கு மாற்றினர்.
அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு அங்குள்ள சேறு சகதிகளை ஒரு வாரத்திற்கும் மேலாக தனியார் நிறுவன ஊழியர்கள் அகற்றி வந்தனர். அத்தி வரதர் வீற்றிருந்த நான்கு கால் மண்டபத்தை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன.அத்தி வரதரை வெளியே எடுப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் ஒரு மாதமாகவே செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில் ஜூன் 29ம் தேதி நள்ளிரவு அத்தி வரதரை வெளியே எடுப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து வந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகத்தினர் அனந்த சரஸ் குளத்திலிருந்து வெளியே எடுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணிக்கு போலீஸ் கோவில் பட்டாச்சாரியர்கள் செயல் அலுவலர் மற்றும் கோடியக்காரர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கோவில் குளத்தில் இறங்கினர்.போலீசார் பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின் போலீசார் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றிய பின் கோடியக்காரர்கள் 20க்கும் மேற்பட்டோர் நான்கு கால் மண்டபத்தின் கீழ் சேற்றில் இறங்கி சயன கோலத்தில் இருந்த அத்தி வரதரை நேற்று அதிகாலை 2:00 மணிக்கு வெளியே கொண்டு வந்தனர்.நாக வடிவிலான கற்கள் அத்தி வரதருடன் இருந்துள்ளன. அத்தி வரதரை வசந்த மண்டபத்திற்கு கொண்டு வந்த பின் நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அத்திவரதர் மீது படிந்திருந்த பாசிகளை சிலர் ஆர்வத்துடன் பெற்று சென்றனர்.
அதன் பின் வசந்த மண்டபத்தை பூட்டி வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் அருகே யாரையும் போலீசார் அனுமதிப்பதில்லை. அத்திவரதரை 29ம் தேதி இரவு வெளியே எடுப்பதாக முதலில் கோவில் நிர்வாகம் கூறி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென வெளியே எடுத்துள்ளனர். குளத்திலிருந்து சுவாமி வெளியே வரும் நிகழ்வை பார்க்க ஏராளமானோர் கூடிவிடக் கூடாது என்பதற்காகவே சுவாமி வெளியே வரும் நாள் குறித்து தெளிவான விளக்கத்தை கோவில் நிர்வாகம் கூறாமல் இருந்துள்ளது.
குளத்தில் வீற்றிருந்த அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு பின் குளத்தை விட்டு வெளியே கொண்டு வந்து விட்டனர் என சமூக வலைதளங்களில் நேற்று காலை வேகமாக செய்தி மற்றும் படங்கள் பரவின.இதனால் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் சுவாமியை தரிசிக்க நேற்று காலை முதல் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தபடியே இருந்தனர். ஆனால் அத்தி வரதரை பார்க்க அனுமதி இல்லை என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்த பின் மூலவரை தரிசித்து சென்றனர். வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் இருந்த அத்தி வரதரை பொதுமக்கள் யாரும் ஞாயிறு இரவு வரை பார்க்க முடியாது; புகைப்படம் எடுக்கக் கூடாது என கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார். முன்னதாக நேற்றும் இன்றும் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்தி வரதர் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். பின் ஞாயிற்றுக்கிழமை காலை புண்ணியாவதனம் ஹோமம் நடத்தப்படும். அதன் பின் தைல காப்பு அணிவிக்கப்படும். இவை அனைத்தும் முடிந்த பின் திங்கள் கிழமை காலை தான் அத்தி வரதரை அனைவரும் தரிசிக்கலாம் என அவர் தெரிவித்தார்.