பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
12:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூலை 7 சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது. கோயிலில் அன்று உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து காப்பு கட்டப்படும். சுவாமி, அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்படத்தை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருள்வர். கோயில் ஓதுவார்களால் தேவாரம் பாடப்படும்.
சுவாமி 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடக்கும். ஜூலை 15 வரை இந்த உற்ஸவம் நடக்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 16 மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மா, பலா, வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். இரவு யானை மண்டபத்தில் உற்ஸவர் எழுந்தருளி, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி தீபாராதனை நடக்கும்.