பக்தர்களுடன் சேர்ந்து தினமும் ராமரை பூஜித்து வந்தார் சேர மன்னரான குலசேகரர். இதை விரும்பாத அமைச்சர், அரண்மனையில் இருந்த ரத்தினமாலை ஒன்றை மறைத்து விட்டு, பக்தர்களின் மீது பழி சுமத்தினார். யார் என்பதைக் கண்டுபிடிக்க சோதனை ஒன்றை வைத்தார். அதன்படி பாம்பு அடைக்கப்பட்ட குடம் ஒன்றில் பக்தர்கள் ஒவ்வொருவராக கை விட்டு, ’ரத்தினமாலையை எடுக்கவில்லை’ என சத்தியம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையறிந்த மன்னர், “இந்த பக்தர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்பது உண்மையானால் பாம்பு என்னைத் தீண்டாதிருக்கட்டும்” என்று சொல்லி குடத்திற்குள் கையை விட்டார். பாம்பும் தீண்டவில்லை. நேர்மையின் சக்தியை உணர்ந்த அமைச்சர் மாலையை ஒப்படைத்ததோடு, மன்னிப்பும் கேட்டார். இந்த மன்னரே ’குலசேகர ஆழ்வார்’ எனப் போற்றப்படுகிறார்.