பதிவு செய்த நாள்
03
ஜூலை
2019
02:07
உடுமலை:உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில், மகா கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 4ல்) நடக்கிறது.
உடுமலை, தளி ரோடு செங்குளம் அருகே, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், முழுவதும் கற்கோவிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளிலும், நம்பெருமாள் அவதார மூர்த்திகளான, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ விஷ்வக்ஷேனர், ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளுகின்றனர்.இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 4ல்) நடக்கிறது.
மகா கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள், கடந்த மாதம், 30ம் தேதி துவங்கின. தினமும், காலை, மாலை என யாக சாலை பூஜைகள் நடந்து வருகின்றன.பாலாஜி பட்டாச்சார்யார் தலைமையிலான, பட்டாச்சார்யார்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலை பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ விஷ்வக்ஷேனர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் நேத்ரோன்மீலனம் எனப்படும் கண்திறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று (ஜூலை 3ல்) காலை, 9:00 மணிக்கு, யாக சாலை பூஜை நடக்கிறது.
காலை, 11:00 மணிக்கு, ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும், ஸ்ரீஆண்டாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை, 3:00க்கு, ஸ்ரீ வேங்கடேச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00க்கு, யாக சாலை பூஜைகள் நடக்கின்றன.நாளை, (ஜூலை 4ல்)காலை, 5:00க்கு, விஸ்வரூப தரிசனம், காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், யாகசாலை நிறை வேள்வி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு மற்றும் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. யாக சாலை பூஜைகளை தொடர்ந்து, அன்னதானம் நடந்து வருகிறது.
கும்பாபிஷேக விழாவில், ஸ்ரீ ரங்கம், ஸ்ரீமுஷ்ணம் மகா தேசிய சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் 24 வது பட்டம், ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், ஸ்ரீமத் அகோபில மடம் ராஜகோபாலன் மற்றும் தாமல் ஸ்ரீராமகிருஷ்ணன், குறை ஒன்றுமில்லாத கோவிந்தா என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.ஏற்பாடுகள் தீவிரம் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை சுற்றிலும் நின்று பார்க்கும் வகையில் இடவசதி, ஸ்பிரிங்லர் மூலம் தீர்த்தம் தெளிக்கும் வசதி, சுற்றுப்புற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், உடுமலை யிலிருந்து பள்ளபாளையம் செல்லும் ரோட்டில், இடது புறம் வாகனங்கள் பார்க்கிங் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.யாக சாலை பூஜைகள் துவங்கியது முதல், தொடர்ந்து மூன்று வேளையும் அன்னதானம் நடக்கிறது.
கும்பாபிஷேகம் அன்று, அன்னதானத்திற்காக, ஏராளமான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.