பதிவு செய்த நாள்
07
ஜூலை
2019
02:07
சென்னை:காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில், தாத்தாச்சாரியார்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவிலின் நிர்வாக அறங்காவலர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இது குறித்த விசாரணை, ஆகஸ்ட், ௨க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜபெருமாள் கோவில் குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு பின், அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு,2019 ஜூலை, 1 முதல், பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. பூஜைகள், 48 நாட்கள் செய்யப்படுகின்றன. தினசரி, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசிக்கின்றனர்.இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக, தாத்தாச்சாரியார்கள் இருந்தனர். இவர்கள் லக்ஷ்மி குமார தாத்தாச்சாரியா என்ற, 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, வைணவ குரு பரம்பரையில் வந்தவர்கள்.பரம்பரை அறங்காவலர்களாக உள்ள தங்களை, அத்திவரதர் வைபவத்தில் பங்கேற்க அனுமதிக்கவும், கோவிலின் மத விஷயங்களில், அறநிலையத்துறை முடிவெடுக்க தடை விதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், தாத்தாச்சாரியார் குடும்பத்தைச் சேர்ந்த, சம்பத்குமரன் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அறநிலையத் துறைக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தேவராஜ சாமி தேவஸ்தானத்தின் நிர்வாக அறங்காவலரான, என்.தியாகராஜன்சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜா தாக்கல் செய்த அறிக்கை:ஜூன், 30ம் தேதி, அத்திவரதருக்கு, தத்தாச்சாரியார் முன்னிலையில், பூஜைகள் நடத்தப்பட்டன; தினசரி பூஜைகள் நடக்கின்றன. நைவேத்திய பிரசாதம், தீர்த்த துளசி பிரசாதம், முதலில் தாத்தாச்சாரியார்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், மற்றவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. ௪௮ நாட்களும், இந்த நடைமுறை பின்பற்றப்படும்.தாத்தாச்சாரியார்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. அதிகாலையில், பூஜைகள் துவங்குகின்றன; மாலை வரை நடக்கும். கடைசியாக தீப ஆரத்திக்கு பின், திரை மற்றும் கதவு மூடப்படும். பின், மறுநாள் பூஜை துவங்கும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, விசாரணையை, ஆக.,2 க்கு, நீதிபதி ஆதிகேசவலு தள்ளிவைத்தார்.