பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
01:07
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே, சித்திரங்கள் நிரம்பிய சித்திர குளம் மற்றும் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, வடசேரி கிராமத்தில் முட்புதர்கள் சூழ்ந்திருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது. அதில், படித்துறையுடன் கூடிய, அழகிய குளத்தின் நடுவில் கிணறு இருந்தது தெரிய வந்தது.
தண்ணீர் இல்லாமல் உள்ள இதில், பழங்கால தமிழரின் சிற்ப கலையை விளக்கும் வகையில், பல்வேறு அரசர்கள் தோற்றம், ஆண் பெண் உறவு, நீண்ட பாம்பின் வடிவம், ஆமை, மீன் உருவங்கள் போன்ற சித்திரங்கள் நிறைய உள்ளன. 15ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். குளத்தின் மேற்கு பகுதியில், கோவில் உள்ளது. அதில், நாயக்கர் காலத்தை சேர்ந்த, இரண்டு உடன் கட்டை நடுகற்களும், உடைந்த நிலையில் ஒரு நடுகல்லும் உள்ளன. அதில், போரில் இறந்த வீரர்களுக்காக, அவர்களது மனைவியர் உடன்கட்டை ஏறிய காட்சிகள் உள்ளன. இந்த குளத்தை போன்ற சித்திர குளம், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடிக்கு அருகில் சின்னயன் பேட்டையில் உள்ளது. இதனால், இந்த பகுதி நாயக்க அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். காணிநிலம் முனிசாமி, சித்த வைத்தியர் சீனிவாசன் உடனிருந்தனர்.