பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
01:07
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவில், பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டு தோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது.நேற்று காலை 6.00 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. காலை 8.00 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிேஷகமும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. தனவேலு எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு நிர்வாகிகள் முத்துராமன், காத்தவராயன், பிரபு, சக்திவேல், முத்துக்கண்ணு, நிர்வாக அதிகாரி பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும், யானை, குதிரை, நாகம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும் 13ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், தேர் திருவிழா வரும் 15ம் தேதி நடக்கிறது. 16ம் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்ப உற்சவமும், 17 ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.