பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
01:07
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, கோட்ட மேலாளர் தெரிவித்து உள்ளார்.
திருத்தணி முருகன் கோவிலில், இம்மாதம், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ஐந்து நாட்கள் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.இந்த விழாவிற்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு முருகப் பெருமானை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.பக்தர்கள் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, திருவள்ளூர் கோட்ட மேலாளர், ஸ்ரீதர் கூறியதாவது: ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி, வரும், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, வேலூர், புத்தூர், திருப்பதி, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, மொத்தம், 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.இதுதவிர, திருத்தணியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு, நகர பஸ்கள் இயக்கப்படும்.மேற்கண்ட ஐந்து நாட்களும், 24 மணி நேரமும் சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.