உலகில் நீண்ட காலம் வாழவே அனைவரும் விரும்புவர். வாழவும், செல்வம் சேரவும் வரம் கேட்கிறார் மகாகவி பாரதியார். நூறு வயது வாழ்ந்திட என்ன வேண்டும்? முதலில் மனம் சலனமற்று ஓரிடத்தில் நிற்க வேண்டும். தற்போது உலகில் நடப்பது என்ன? நம் கையில் ரிமோட் கன்ட்ரோல் வந்த பிறகு மனம் அலைபாயும் விதத்தை சொல்லவும் வேண்டுமோ? தொலைக்காட்சியில் குறைந்தது 10 நிமிடம் ஒரு நிகழ்ச்சியை பார்த்தால் பெரிய விஷயம். ஓரிடத்தில் நிற்காமல் மாறி, மாறி மனம் ஓடுகிறது. கையில் இருக்கும் அலைபேசி படும்பாடு சொல்லி மாளாது. பேஸ்புக்கில் இருக்கும் போதே வாட்ஸ்– ஆப்புக்கும், அங்கு இருக்கும் போதே மெயில் பார்க்க ஓடுவதும், அங்குள்ள போதே யூ– டியூப்பிற்குள் நுழைவதும் என மனிதனின் மனம் குரங்காட்டம் ஆடுகிறது.
மனதின் நிலை வினோதனமானது. நாம் இருக்கும் இடத்தில் மனம் இருப்பதில்லை. வீட்டில் இருந்து கோயிலுக்கு கிளம்ப நாம் தயாராகும் போதே, மனம் கோயிலுக்குப் போய் சுற்றி வந்து விடும். நாம் கோயிலை அடைந்தவுடன் அது அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து விடும். ஆக ஓரிடத்தில் நிற்க மறுக்கிறது. இதனால் தான் பெரியவர்கள், மனம், வாக்கு, உடல் மூன்றையும் இணைத்து வழிபட வேண்டும் எனக் கூறினர். எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்ய வேண்டும். மனம் சலனமற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கலங்கிய நீரில் பிம்பம் தெரியாதது போல கலங்கிய மனதில் கடவுளின் திருவுருவம் தோன்றாது. புத்தியில் தெளிவு இருந்தால் மட்டுமே முகத்தில் ஒளி உண்டாகும். அதற்கு புத்தியில், குழப்பம் அற்ற தெளிந்த நிலை வேண்டும் என வேண்டுகிறார் மகாகவி. மனம் தூய்மை பெற்றால் புத்தியில் ஒளி தோன்றும். இருள் விலகும். தூய மனம் இருந்தால் பயம் இருக்காது. பயம் போனால் மன இறுக்கமோ, மன அழுத்தமோ ஏற்படாது. ஆனால் இன்று எல்.கே.ஜி குழந்தை முதல் எண்பது வயது பெரியவர் வரை சொல்லும் ஒரே சொல் ’டென்ஷன்’ தான். டென்ஷன் என்னும் மன இறுக்கம் தான் நோய்களுக்கு எல்லாம் அடிப்படை. மனதில் தூய்மை, தெளிவு, புத்தியில் இருள் இன்மை இருந்தால் வாழ்வில் அமைதி இருக்கும். அப்போது நூறாண்டுகள் நோயின்றி வாழலாம். இப்படி வாழ்பவர் செல்வத்தை ஈட்ட தடையேது? எனவே செல்வத்துடன் நூறாண்டு வாழ்ந்திட வரம் அருள வேண்டும் என மகா கணபதியை பிரார்த்திக்கிறார் பாரதியார். - என். ஸ்ரீநிவாஸன்