பதிவு செய்த நாள்
14
ஜூலை
2019
12:07
காரைக்கால்:காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, பரமதத்த செட்டியார் - புனிதவதியார் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெறுகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் கோவில் உள்ளது. இங்கு, அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும்விதமாக, மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு மாங்கனி திருவிழா, நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. பின், பரமதத்த செட்டி யார் பட்டு வேட்டி முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் ஆற்றங்கரையில் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக அம்மையார் கோவிலுக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார்.உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன் செல்ல, பரமதத்தர் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.இன்று 14ம் தேதி காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை 15ம் தேதி மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 16ம் தேதி, சிவபெருமான் பிச்சாண்டவர் மூர்த்தியாக வீதி உலா வருவார். அப்போது, பக்தர்கள் மாங்கனிகள் வீசும் நிகழ்ச்சி நடக்கும். இவ்விழா, தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும்.அதையொட்டி, பாரதியார் சாலை. திருநள்ளாறு சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மாங்கனி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையில் எஸ்.பி.,க்கள் மாரிமுத்து, வீரவல்லபன் மற்றும் போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று அம்மையார் கோவில் கலையரங்கில் நடந்தது.விழா நாட்களில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.30 டன்மாம்பழங்கள்மாங்கனித் திருவிழாவைாயொட்டி, சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம் பரவை. மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து, பல்வேறு ரகங்களில் 30 டன் மாம்பழங்கள் காரைக்காலுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த மாம்பழங்கள், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டதா என, உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.