அத்தி வரதர் தரிசனம்: மாற்றுத்திறனாளி, முதியோருக்கு சிறப்பு ஏற்பாடு
பதிவு செய்த நாள்
15
ஜூலை 2019 01:07
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளிகள், முதியோர், கைக்குழந்தை வைத்திருப்போர் வசதிக்காக, ஆன்லைன் சேவை துவக்கப்பட உள்ளது. இச்சேவை நடைமுறைக்கு வந்ததும், இவர்கள், அத்தி வரதரை விரைவாக தரிசிக்கலாம், என, கலெக்டர், பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், வெகு விமரிசையாக நடைபெறுகிறது.அடிப்படை வசதிநேற்று காலை, கேரள கவர்னர், சதாசிவம், குடும்பத்துடன் வந்து, அத்தி வரதரை தரிசனம் செய்தார்.
இந்நிலையில், கோவிலுக்கு வரும், பக்தர்களுக்கான அடுத்தகட்ட வசதி குறித்து, கலெக்டர், பொன்னையா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பக்தர்கள் வருகை, தினமும் அதிகரிக்கிறது. நேற்று முன்தினம் மட்டும், 2.5 லட்சம் பேர், அத்தி வரதரை தரிசித்துள்ளனர். வாரந்தோறும், மாவட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்தி, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.பகலில் குவிந்த குப்பையை, இரவில், நான்கு மணி நேரத்தில் அகற்றுகிறோம். நகரில், 20 மினி பஸ் இயக்கப்பட்டது; 30 ஆக அதிகரித்துள்ளோம்.எட்டு மொபைல் ஆம்புலன்ஸ், 10 பைக் ஆம்புலன்ஸ் ஆகியவை, தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நடவடிக்கை: கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட துாரம் நிற்பதை தவிர்க்க, கோவிலுக்குள்ளேயே, 4,500 பேர் வரிசையில் செல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் போதிய இடவசதி செய்வதால், இரவு, 9:30 மணிக்கு பதிலாக, 9:00 மணிக்கு, கிழக்கு கோபுர கதவு மூடப்படும். இரவு, 9:00 மணிக்கு, கோவிலுக்குள் வந்தோர், தரிசனம் முடிய இரவு, 11:00 மணி ஆகும்.
கைக்குழந்தைகள் வைத்திருப்போர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக, ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடு நடக்கிறது. இது நடைமுறைக்கு வந்ததும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இவர்கள், அத்தி வரதரை விரைவாக தரிசிக்கலாம். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்படும். போலி பாஸ் பயன்படுத்தியதாக, ஏழு பேர் மீது வழக்கு பதிய அறிவுறுத்தியுள்ளோம்.அத்தி வரதரை தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் ஆகும் என்பதை, பொதுமக்கள் மனதில் வைத்து, கோவிலுக்கு வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
|