பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
01:07
காஞ்சிபுரம் : அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். அத்திவரதரை மீண்டும் பூமிக்குள் வைக்ககூடாது என்று
ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் விடுத்துள்ள கோரிக்கை பற்றி கேள்வி
எழுப்பிய போது, அது குறித்து தமிழக முதல்வர் மற்றும் இந்துசமய
அறநிலையத்துறையினர் ஆகம விதிகளை கணக்கில் கொண்டு முடிவெடுப்பர், என்றார்.
ஓய்வறைகள் : இன்று (ஜூலை 22) காஞ்சிபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 22வது நாளாக அத்திவரதர் தரிசனத்திற்கு பக்தர்கள் அதிக அளவில் வந்துள்ளனர். அவர்களுக்கு ஓய்வறை வசதிகள், போதுமான கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
3 இடங்களில் அன்னதானம்: அதேபோல, மேற்கு கோபுரம் அருகில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 16 கால் மண்டபத்தின் அருகில் பக்தர்களுக்கு தயிர்,பிஸ்கட், வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ குழுக்கள் : அதேபோல கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குப்பைகளை அள்ளி 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கான வசதிகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர், என்றார்.
குவிந்த பக்தர்கள் : காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 22வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள், இன்று கொட்டும் மழையிலும் குவிந்துள்ளனர்.