பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
02:07
ஈரோடு: ”திருநீறு அணிந்தால் தீங்கு, சோதனை வராது. அது, கவசமாக நம்மை காக்கும்,” என்று, அரிகர தேசிக சுவாமிகள், திருமுறை முற்றோதுதல் விழாவில் விளக்கம் அளித்தார்.
திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் சார்பில், பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா, ஈரோடு ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத் தில், நேற்று (ஜூலை., 21ல்) நடந்தது.
விழாவுக்கு தலைமையேற்ற அரிகர தேசிகர், நாயன்மார்களில் முதன்மையான, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய, பன்னிரு திருமுறை பாடல்களை பாடி, விளக்கம் அளித்தார். சிவத்தொண்டு எப்படி இருக்க வேண்டும்? என்பதை விளக்கி, அவர் பேசியதாவது: சிவனடியார்கள் செய்யும் தொண்டு, தன்னலம் சார்ந்திருக்கக் கூடாது. ஆலய நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஈசன் ஆலயத்துக்காக, நாம் செய்யும் சிறு தொண்டும், ஆலய வரலாற்றில் இடம் பெறும். ஈசனை, நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டும். எப்போதும் திருநீறு அணிய வேண்டும்.
திருநீறு அணிந்தவர்களுக்கு பெரிய தீங்கும், சோதனையும் வராது. கவசமாக இருந்து, திரு நீறு நம்மை காக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில், சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.