பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
01:07
வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் ஒன்றியம், மதியம்பட்டி பஞ்., சவுரிபாளையத்தில் ஆங்கிலே யர் காலத்தில் கட்டப்பட்ட புனித மரிய மதலேனாள் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் திருத்தேர் விழா நடைபெறும். அதன்படி, கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
18ல் தொடங்கிய நவநாள் திருப்பலி நிகழ்ச்சி, 20ல் முடிந்தது. நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்) நள்ளிரவு, வேண்டுதல் திருத்தேர் பவனி, திருப்பலி வரவேற்பு, ஆடம்பர திருப்பலி, ஜெப வழிபாடு, கூட்டு பாடற் திருப்பலி, இரவில் குணமளிக்கும் ஜெப வழிபாடு நடந்தது. நேற்று (ஜூலை., 22ல்) காலை நடந்த திருவிழா திருப்பலி நிகழ்ச்சிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமை வகித்தார். மதியம், 2:00 மணிக்கு நற்கருணை ஆசி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி நடந்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை., 22ல்) காலையில் நடக்க இருந்த நிகழ்ச்சியில், பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மெச்சாடோ கலந்து கொள்ள இருந்தார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன், பெங்களூரு உயிர்த்து எழுந்த அன்னை திருத்தலத்தில் உள்ள வாசகங்களை தமிழில் எழுத அவர் மறுத்ததால், அவரது வரவுக்கு இப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து, போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதனால், அவரது வருகை ரத்து செய்யப் பட்டது.