பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக் கோவிலில், 22 நாட்களாக மூடப்பட்டிருந்த பிரசாத கடையை கோவில் நிர்வாகம் நேற்று (ஜூலை., 23ல்), திறந்தது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் தரிசனத்திற்கு பின், மாடவீதியில் உள்ள பிரசாத கடையில், விற்பனை செய்யப் படும், சர்க்கரை பொங்கல், , புளியோ தரை, லட்டு, மிளகுவடை, முறுக்கு, பேரீச்சம்பழம், கற்கண்டு உட்பட பல்வேறு பொருட்கள், நெய்வேதிய பிரசாதங்களை பக்தர்கள் வாங்கிச் செல்வர்.ஜூன் மாதம், 30ம் தேதி வரை, கோவில் நிர்வாகத்தால், ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர், விற்பனை செய்து வந்தார்.இம்மாதம், முதல் தேதி முதல், பிரசாதகடை கோவில் நிர்வாகம் நடத்தும் என, இந்து அறநிலை துறை ஆணையர் அறிவித்ததால், பிரசாத கடை மூடப்பட்டது.
அதை தொடர்ந்து, 22 நாட்களுக்கு பின், நேற்று (ஜூலை., 23ல்), அதே மாடவீதியில் பிரசாத கடை திறப்பு விழாவிற்கு, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகரன் தலைமை வகித்தார். கோவில் தக்கார் ஜெய்சங்கர், பிரசாத கடை மற்றும் விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.