பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
11:07
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆடிக்குண்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இவ்விழாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு ஆடிக்குண்டம் விழா நேற்று முன் தினம் இரவு, பூச்சாட்டுடன் துவங்கியது.பவானி ஆற்றங்கரையில் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில் இருந்து, இரவு உடுக்கை, மேள, தாளங்கள், நாதஸ்வர இசை முழங்க அம்மன் ஆபரண அணிக்கூடையோடு பூசாரி தண்டபாணி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.சிறப்பு பூஜைக்கு பிறகு, பூசாரிக்கு காப்பு கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு, நெல்லித்துறை ஊர் மக்களை கோவில் நிர்வாகம் அழைத்து வந்து, பூச்சாட்டும் நிகழ்ச்சி துவங்கியது. பெண்கள் மற்றும் பொது மக்கள் கொண்டு வந்த பூக்கள் மற்றும் பொரியை அம்மன் மீது துாவி வழிபட்டனர். பின்னர் திருவிழா பூச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, நெல்லித்துறை பொது மக்கள், கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர். வருகிற, 28ம் தேதி கொடியேற்றமும், 30ம் தேதி குண்டம் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.