பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
மதுரை : ”இறைவழிபாட்டுடன் சமுதாய சீர்திருத்தப் பணிகளிலும் துறவியர் ஈடுபட வேண்டும்,” என விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மிலின் பரேண்டே வேண்டுகோள் விடுத்தார்.
மதுரையில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா நேற்று (ஜூலை., 24ல்) துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித் தார். கோவிலுார் ஆதினம், விழாக்குழு நிர்வாகிகள் சுவாமிகள் சிவானந்த சுந்தரானந்தா, ராமானந்தா, சாஸ்வதானந்தா, சிவயோகானந்தா, சாதனா குழுமப் பள்ளிகள் இயக்குனர் நடனகுருநாதன் முன்னிலை வகித்தனர்.விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மிலின் பரேண்டே பேசியதாவது: இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தை ரிஷிகள், முனிவர்கள் நமக்கு கற்று கொடுத்துள்ளனர்.
இமயமலை, திருவண்ணாமலை, மரங்கள், நதிகள் போன்ற இயற்கையை போற்றுவதும், இறைவனாக கருதி வணங்குவதும் ஹிந்துக்களின் பாரம்பரியம். இயற்கையை புனிதமாக கருதும் பழக்க வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் ஹிந்துக்களின் தொன்மையான பாரம்பரியம்.இவற்றை மக்கள் மறந்து விடக்கூடாது, என்பதற்காக இது போன்ற மாநாடுகள் நடத்தி இயற்கையின் புனிதம் காக்கும் முயற்சிகள் தொடர வேண்டும். தேச மேம்பாட்டுக்காக ரிஷிகள், மகான்கள் பாடுபட்டனர்.
அந்த வரிசையில் ராமானுஜர், நாராயணகுரு உள்ளிட்ட முன்னோர்கள் விட்டு சென்ற இயற்கை வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இறை வழிபாட்டுடன் சமுதாய சீர்த்திருப் பணிகளிலும் துறவியர் ஈடுபட வேண்டும், என்றார்.திருவாவடுதுறை ஆதீனம், ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், விழாக்குழு நிர்வாகிகள் வேதாந்த ஆனந்தா, ஸ்ரீநிவாசன், பாலாஜி, ராஜன், பல்வேறு மடாலய குரு மகா சன்னிதானங்கள் கலந்து கொண்டனர். பிற்பகலில் துறவியர் மாநாடு நடந்தது. ஆக.,3 ஆடி பெருக்கில் ஒரு லட்சம் பேர் வைகையில் சிறப்பு தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக தற்காலிகமாக, ஏழு புனித கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளன.