பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அருகே, அனுமந்தண்டலம் கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் வீரன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ளது அனுமந்தண்டலம் கிராமம். இப்பகுதி யில், கிராமத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானம் அருகே, ஆல மரத்தடியில், சுற்று வட்டாரத்தில் இல்லாத வகையிலான ஒரு கற்சிலை நீண்டகாலமாக உள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி மற்றும் யுவராஜ், கோகுல சூர்யா உள்ளிட்ட குழுவினர், அச்சிலை குறித்து, நேற்று (ஜூலை., 24ல்), அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அந்த சிலை, 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் வீரன் சிலை என்பதை உறுதி செய்தனர்.
80 செ.மீ., உயரமும், 65 செ.மீ., அகலமும் உள்ள, இந்த வீரனின் வலது கையில், கைப்பிடி கொண்ட கேடயம் ஏந்தப்பட்டும், இடது கையானது வாளை உயர்த்தி பிடித்தும் காணப் படுகிறது. கால்கள் இரண்டும் சற்று வளைந்து, பாதங்களும், முகமும் வலது பக்கம் திரும்பி, போரில் எதிரிகளை எதிர்த்து நிற்பதைப் போன்ற வீரனாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வீரனின் கழுத்தில் அணிகலன், கைகளில் காப்பு, இடையில் அரையாடை, கீழ் காலில் வளையமும் அலங்கரிக்ப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடுகல் வைக்கும் பழக்கம் மிக பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது. நடுகல் என்பது போரில் மரணம் அடைந்த வீரனின் நினைவாக, அவ்வீரனின் உருவத்தை, ஒரு கல்லில் சிற்பமாக செதுக்கி வழிபடுவது வழக்கத்தில் இருந்துள்ளது. சில நடுகற்களில் வீரனின் பெயர், காலம், எதற்கான போர், எவ்வாறு நடந்தது, வீரன் எப்படி இறந்தான் என்பன போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பகுதியில் உள்ள நடுகல் குறித்து கல்வெட்டு கள் ஏதும் இங்கு காணப்படவில்லை.
எனினும், இந்த வீரனின் உருவம், அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, இந்த நடுகல், 8ம் நுாற்றாண்டு இறுதி காலமான பிற்கால பல்லவன் காலத்தை சார்ந்திருக்க வாய்ப் புள்ளது. தமிழக தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மார்க்சியா காந்தி அவர் களும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.சு.பாலாஜி, வரலாற்று ஆய்வு மைய தலைவர், உத்திர மேரூர்.