பதிவு செய்த நாள்
29
ஜூலை
2019
12:07
காரமடை: ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியை ஒட்டி காரமடை ரங்கநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
கோவை மாவட்டத்தில் வைணவ திருத்தலங்களில், காரமடை ரங்கநாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் சுக்ல பட்சம் மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியை, ஒட்டி நேற்று, அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, கோ தரிசனம், கோ பூஜை , மூலவருக்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜை , நடைபெற்றது. தொடர்ந்து புன்னியாக வசனம், விஷ்வக்சேனர் பூஜை, நவ கலச ஆவாகனம் முடிந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு அபிஷேகம் நடந்தது. சகல திரவிய திருமஞ்சனம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிகப்பு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சாற்றுமுறையோடு வைபவம் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.