பதிவு செய்த நாள்
24
மார்
2012
12:03
2.1 அதுவே நீ
கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற் பகுதியில் கண்டோம். சிரத்தை, ஆசையின்மை போன்ற அடிப்படைப் பண்புகளுடன் புத்தியின் விழிப்பு மிகவும் அவசியம் என்பது அங்கே விளக்கப்பட்டது.
விழிப்புற்ற புத்தியில் எவ்வாறு ஆன்ம தரிசனம் உண்டாகிறது, இறையனுபூதி என்றால் என்ன போன்றவற்றை விளக்குகிறது இந்த இரண்டாம் பகுதி. கட உபநிஷதம் கூறுகின்ற வித்யைகளுள் ஒன்றான அங்குஷ்ட்டமாத்ர வித்யை இந்தப் பகுதியில் வருகிறது.
மரணத்திற்குப் பின்னால் என்ன நிகழ்கிறது என்பது நசிகேதனின் கேள்வி. மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே, மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று இந்த உடம்பினுள் உள்ளது. அதுவே நீ என்று அவனுக்கு இங்கே உபதேசிக்கிறான் எமதர்மன். அது எனப்படுகின்ற அந்த ஆன்மா மூன்று அத்தியாயங்களிலுமாக 10 கோணங்களில் விளக்கப்படுகிறது.
ஆழ்ந்த சிந்தனைக்கு, தியானத்திற்கு உரியது இந்தப் பகுதி. எதை நினைக்கிறோமோ அது ஆகிறோம் என்பார் சுவாமி விவேகானந்தர். நான் உடம்பல்ல, உயிரல்ல; அனைத்தையும் கடந்த ஆன்மா என்பதைத் திரும்பத்திரும்ப பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது அதுவே நீ என்ற இந்த உபதேசப் பகுதி. அதுவே நான் என்ற இந்த உயர்நிலை தியானத்தின்மூலம் நாம் ஆன்மா என்பதை உணர்கிறோம், ஆன்மா ஆகிறோம்.
ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனையுடன் அத்தியாயம் தொடங்குகிறது.
புலன்களை உள்ளே திருப்புதல் : 1-2
1. பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ
தஸ்மாத் பராங் பச்யதி நாந்தராத்மன்
கச்சித்தீர: ப்ரத்யகாத்மானமைக்ஷத்
ஆவ்ருத்த சக்ஷúரம்ருதத்வமிச்சன்
கானி-புலன்களை; பராஞ்சி-புற நோக்குடன்; ஸ்வயம்பூ-இறைவன்; வ்யத்ருணத்-அமைத்துள்ளார்; தஸ்மாத்-அதனால்; பராங்-வெளியில்; பச்யதி-பார்க்கின்றன; ந அந்தராத்மன்-அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை; அம்ருதத்வம்-மரணமற்ற நிலையை; இச்சன்-விரும்புகின்ற; கச்சித்-யாரோ; தீர-விவேகி; ஆவ்ருத்த சக்ஷú-அக நோக்குடன்; ப்ரத்யகாத்மானம்-ஆன்மாவை; ஐக்ஷத்-பார்க்கிறான்.
பொருள் : புலன்களைப் புற நோக்குடன் இறைவன் அமைத்துள்ளார். அதனால் அவை வெளியில் பார்க்கின்றன; அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை. மரண மற்ற நிலையை விரும்புகின்ற யாரோ விவேகி அக நோக்கு உடையவனாய் ஆன்மாவைப் பார்க்கிறான்.
தொலைநோக்கியால் தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்க முடியும்; அருகிலுள்ள ஒன்றைப் பார்க்க முடியாது. தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதற்காகவே தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே புலன்கள் வெளியுலகை அனுபவிப்பதற்காக உள்ளவை. அவற்றை உள்ளே திருப்புவது என்றால் அவற்றின் புற நாட்டத்தைத் தடுப்பது, அவ்வளவுதான். அவை புறமுகமாகச் செயல்படாமல் இருக்குமானால் அக வளர்ச்சியும் அக மாற்றங்களும் இயல்பாகவே நிகழும். இது சொல்வது எளிது, செய்வது மிகமிகக் கடினமானது. அதனால்தான் யாரோ விவேகி ஒருவன் அக வளர்ச்சியை நாடுவாக மந்திரம் கூறுகிறது.
2. பராச: காமானனுயந்தி பாலா
தே ம்ருத்யோர்யந்தி விததஸ்ய பாசம்
அத தீரா அம்ருதத்வம் விதித்வா
த்ருவமத்ருவேஷ்விஹ ந ப்ரார்த்தயந்தே
யே-எந்த; பாலா-மனப்பக்குவம் இல்லாதவர்கள்; பராச-புறத்திலுள்ள ;காமான்-சுகபோகப் பொருட்களை; அனுயந்தி-நாடுகிறார்களோ; தே-அவர்கள்; விததஸ்ய-எங்கும் இருக்கின்ற; ம்ருத்யோ-மரணத்தின்; பாசம்-வலையை; யந்தி-அடைகின்றனர்; அத-எனவே; தீரா-விவேகிகள்; அத்ருவேஷு-நிலையற்றவற்றில் அம்ருதத்வம்-அழிவற்ற; த்ருவம்-நிலையானதை; விதித்வா-அறிந்து; இஹ-இங்கே; ந ப்ரார்த்தயந்தே-விரும்புவதில்லை.
பொருள் : மனப்பக்குவம் இல்லாதவர்கள் புறத்திலுள்ள சுகபோக பொருட்களை நாடுகின்றனர். எங்கும் இருக்கின்ற மரண வலையில் அவர் வீழ்கின்றனர். ஆனால் நிலையற்ற உலகில் அழிவற்ற நிலையான பொருள் ஒன்று இருப்பதை விவேகிகள் அறிகின்றனர். எனவே அவர்கள் சுகபோகப் பொருட்களை விரும்புவதில்லை.
சுகபோகப் பொருட்கள் புலன்களின் ஆற்றலை அழித்துவிடுகின்றன என்று ஏற்கனவே(1.1.26) கண்டோம். எனவே சுகபோகங்களை நாடுபவர்கள் விரைவில் மரணத்தின் பிடியில் சிக்குகிறார்கள் என்பது இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
மரணம் எங்கும் நிறைந்ததாகக் கூறப்படுவதைக் கருத்தில்கொள்ள வேண்டும். உண்மையில் இந்த உலகம் மரணத்தின் நிழல் பிடிந்தது. தோன்றிய அனைத்தும் மரணம் என்ற மாபெரும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. புலன்களின் வசப்பட்டு, அவற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் நாமும் மரண வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இந்த நிலையற்ற உலகின் உள்ளே, அதாவது அதன் பின்னணியில், அழிவற்ற, நிலையான இறைவன் உள்ளார். அவரை நாடும்போது சுகபோகப் பொருட்களிலிருந்து நாம் விலகுகிறோம்; மரணத்திலிருந்து விலகுகிறோம். இவ்வாறு விவேகி சுகபோகப் பொருட்களை நாடாமல் இருக்கிறான், புலன்களின் போக்கைத் தடுத்து, புற வளர்ச்சியை விரும்பாமல் அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தி மரணத்தை வெல்கிறான்.
அதுவே நீ (3-9)
அதுவே நீ என்ற இந்தப் பகுதி ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். ஆழ்ந்த சிந்தனையின்மூலம் இந்த உணர்வு, அதாவது உடம்பையும் மனத்தையும் கடந்த ஆன்மா நான் என்ற உணர்வு நம்மிடம் வலுப்படுகிறது. புலன்களை வசப்படுத்துவதில் இது மிகவும் உதவுகிறது. புலன்கள் வசப்படும்போது அக வளர்ச்சி உண்டாகிறது. அக வளர்ச்சி ஆன்ம அனுபூதியில் நிறைவுறுகிறது.
சாட்சிப் பொருள் நீ : 3-4
புலன்களின் புற நாட்டத்தைத் தடுக்க வேண்டும். எப்படி? அவற்றிற்கு உண்மையை உணர்த்த வேண்டும்; உலகின் அனுபவங்களில் உள்ளீடு எதுவும் இல்லை என்பதை அவை புரியுமாறு செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியை இந்த மந்திரங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்வில் எவ்வளவோ நிகழ்கின்றன. உடம்பிற்கு எத்தனையோ அனுபவங்கள் வருகின்றன. எத்தனையோ விஷயங்கள் மனத்தைக் கடந்து செல்கின்றன. அவற்றுடன் இணைந்து நாமும் துயரப்படுகிறோம், சுகத்தை அனுபவிக்கிறோம், வெறுக்கிறோம், விரும்புகிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம், ஆனால் இவை எதிலும் பங்கெடுக்காமல் நம்முள் ஒன்று இருப்பதாக ஏற்கனவே (1.3.1) கண்டோம். அதுவே ஆன்மா. அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும்.
3. யேன ரூபம் ரஸம் சப்தான் ஸ்பர்சாம்ச்ச மைதுனான்
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிசிஷ்யதே ஏதத்வை தத்
ரூபம்-காட்சி; ரஸம்-சுவை; கந்தம்-மணம்; சப்தான்-ஒலி; ஸ்பர்சான்-தொடு உணர்ச்சி; மைதுனான் ச-உடலின்பம்; யேன-எதனால்; விஜானாதி-உணர்கிறானோ; ஏதேன-எதனால்; அத்ர-இவற்றில்; கிம்-என்ன; பரிசிஷ்யதே-எஞ்சியிருக்கிறது; ஏவ-என்று; ஏதத்வை-இதுவே; தத்-அது.
பொருள் : காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்களில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்துகொள்கிறானோ அதுவே நீ கேட்ட பொருள்.
அழகிய பூவை ரசிக்கிறோம். நம்முள்ளே உணர்வுப் பொருளாகிய ஆன்மா இருப்பதால்தான் அதனை நம்மால் ரசிக்க முடிகிறது என்பதை மறந்துவிடுகிறோம். உயிரற்ற உடலின் முன்னால் அழகோ நறுமணமோ எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. நம்முள் இருக்கின்ற இருவருள் ஒருவர் அனுபவங்களில் ஈடுபட்டு அனுபவிக்கிறார். மற்றொருவர் சாட்சியாக நின்று அவற்றைக் கவனிக்கிறார் அனுபவங்களைப் பெறுபவருடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போது மேலும்மேலும் செயல்களில் ஈடுபட்டு தளைகளை அதிகப்படுத்திக் கொள்கிறோம். மாறாக, சாட்சியாக நிற்கின்ற ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, விலகி நின்று, அனுபவங்களின் உள்ளீடற்ற தன்மை நமக்கு மேலும்மேலும் தெரியவரும்.
புலன் அனுபவங்கள் உள்ளீடற்றவை என்ற கருத்து நம்முள் பதியும்போது புலன்கள் புறவுலகை நாடுவதை இயல்பாகவே விட்டுவிடுகின்றன; அக நோக்கு என்பது தானாகவே நிகழ்கிறது. எனவே, சாட்சியாக இருந்து பழகுவது என்பது புலன்களை வசப்படுத்துவதற்கான ஒரு சிறந்த பயிற்சி ஆகிறது.
நாம் ஆன்மா என்ற உணர்வு இந்தப் பயிற்சியின் மூலம் வலுப்பெறுகிறது. எனவே சுகதுக்க அனுபவங்கள் நம்மை அணுகும்போது அவற்றுடன் நம்மை இணைத்துக் கொள்ளாமல் விலகி நின்று பார்க்க நம்மைப் பழக்கம் படுத்திக் கொள்ள வேண்டும்.
4. ஸ்வப்னாந்தம் ஜாகரிதாந்தம் சோபௌ யேனானுபச்யதி
மஹாந்தம் விபுமாத்மானம் மத்வா தீரோ ந சோசதி
ஸ்வப்ன அந்தம்-கனவு நிலை; ஜாகரித அந்தம்-விழிப்பு நிலை; ச உபௌ-இரண்டு நிலைகளையும்; யேன-எதனால்; அனுபச்யதி-பார்க்கிறானோ; மஹாந்தம்-மகிமை வாய்ந்த; விபும்-எங்கும் நிறைந்த; ஆத்மானம்-ஆன்மாவை; மத்வா-அனுபூதியில் உணர்கின்ற; தீர-விவேகி; ந சோசதி-கவலைப்பட மாட்டான்.
பொருள் : கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா, அது மகிமை வாய்ந்தது, எங்கும் நிறைந்தது. அதனை அனுபூதியில் உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.
நாம் சாட்சிப் பொருள் என்பதை இங்கே மற்றொரு கோணத்திலிருந்து விளக்க முற்படுகிறான் எமதர்மன். கனவு, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம் இந்த மூன்று நிலைகளின் வழியாக நாம் தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மாலையிலுள்ள நூல் பல முத்துக்களைக் கோர்த்து, அவற்றிற்கிடையே ஒரு தொடர்பை உண்டாக்குவதுபோல் நமது இந்த மூன்று நிலைகளையும் தொடர்பு படுத்திக்கொண்டு நிற்கின்ற பொருளே ஆன்மா.
கனவுலகம் வேறு, விழிப்பில் நாம் வாழ்கின்ற உலகம் வேறு, ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்கின்ற உலகம் வேறு, ஆனால் இந்த மூன்றிலும் நான் என்ற உணர்வு இருக்கிறது. அதனால்தான் நான் கனவு கண்டேன் நான் விழித்திருக்கிறேன். நான் ஆழ்ந்து தூங்கினேன் என்று சொல்கிறோம். கனவில் நனவுலகம் மறைகிறது, ஆழ்ந்த தூக்கத்தில் இரண்டு உலகங்களுமே மறைகின்றன. மறைகின்ற எதுவும் உண்மையாக இருக்க முடியாது. எனவே இந்த மூன்று நிலைகளும் உண்மை அல்ல. இந்த நிலைகள் எதனுடனும் சம்பந்தப் படாமல், மூன்று நிலைகளும் தன்னைக் கடந்து செல்வதை ஒரு சாட்சியாக நின்று காண்கிறது ஆன்மா.
காலத்தின் தலைவன் நீ
நமது உணர்வைப் பிரபஞ்சம் முழுவதுமாக விரிப்பதற்கான ஒரு முயற்சியை இந்த மந்திரத்திலிருந்து காண்கிறோம். உடம்பினும் இதயக் குகையினுள் உள்ள ஆன்மா நான் என்ற கருத்தும் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள பொருளே நான் என்ற கருத்தும் ஒவ்வொரு மந்திரத்திலும் வருகிறது. உணர்வை விரிப்பதற்கான சாதனை இது.
5. ய இமம் மத்வதம் வேத ஆத்மானம் ஜீவமந்திகாத்
ஈசானம் பூத பவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத்
ய-யார்; மத்வதம்-கர்ம பலன்களை அனுபவிக்கின்ற; ஜீவம்-உயிருக்கு ஆதாரமான; இமம்-இந்த; ஆத்மானம்-ஆன்மாவை; அந்திகாத்-அருகில் இருப்பதாக; பூத பவ்யஸ்ய-இறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு; ஈசானம்-தலைவனாக; வேத-அறிகிறானோ; தத-பிறகு; ந விஜுகுப்ஸதே-வெறுப்பதில்லை; ஏதத் வை-இதுவே; தத்-அது.
பொருள் : கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை இருப்பதாகவும், அதேவேளையில் இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்குத் தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்.
நம்முள் உள்ள இருவரில் (1.3.1) ஒருவர் அனுபவங்களைப் பெறுகிறார். மற்றொருவர் அந்த அனுபவங்களைப் பெறுவதற்கு ஆதாரமாக இருக்கிறார். அதுவே ஆன்மா. அதுவே நாம். நம்முள் உள்ள ஆன்மாவே நாம் என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே, காலத்தின் தலைவன் நாம் என்று நமது உணர்வை விரிக்கிறது உபநிஷதம்.
காலத்தின் தலைவன் ஆவது என்றால் என்ன?
பொதுவாக நாம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருப்போம், அல்லது எதிர்காலக் கற்பனைகளில் மிதந்து கொண்டிருப்போம். அதாவது நமது வாழ்க்கை இறந்த மற்றும் எதிர்காலங்களில் உழன்று கொண்டிருக்கிறது. நாம் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. காலத்தின் தலைவனாக இருப்பது என்றால் இறந்த மற்றும் எதிர்காலங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது; நிகழ்காலத்தில் வாழ்வது. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நிரந்தர தியான நிலையில் திளைப்பது என்கிறார். (ம-என்ற புனைபெயரில் தம்மை மறைத்துக்கொண்ட மகேந்திரநாத் குப்தர் ஸ்ரீராம கிருஷ்ணரின் சீடர்; இல்லற ஞானி காலத்தால் அழியாத காவியமான அமுதமொழிகள் என்ற நூலை உலகிற்குத் தந்தவர்) தியானத்தில் கால இடைவெளி மறைகிறது. அன்பு செய்வது பக்தி செய்வது என்றால் நிரந்திர நிகழ்காலத்தின் சன்னதியில் இருப்பது; அங்கே கடந்தகாலத்திற்கோ எதிர் காலத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்குகிறார் அவர்.
எனவே காலத்தை வெல்வது என்றால் கடந்த மற்றும் எதிர்காலங்களில் பிடியிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்தில் வாழ்வது என்றாகிறது. இதை எப்படிச் செய்வது? கடந்த மற்றும் எதிர்காலங்கள் நம்மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன? எண்ணங்களின்மூலம். எனவே மனத்தில் எண்ணங்களே எழாமல் தடுப்பது நிகழ்காலத்தில் வாழ்வதற்கான வழிகளுள் ஒன்றாகும்.
ஓர் எண்ணம் எழுந்து மறைந்தபிறகு அடுத்த எண்ணம் எழுகிறது. இரண்டு எண்ண அலைகளுக்கு இடையேயுள்ள காலத்தை அதிகப்படுத்தும்போது இது நிகழ்கிறது. ( இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள் மனக்கட்டுபாடு உடைய, நல்லொழுக்க வாழ்வில் நிலைபெற்ற உயர்நிலை சாதர்களுக்கு உரியவை. அதுவும், தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட வேண்டியவை. முதற்பகுதியில் நல்லொழுக்கம் போன்ற அடிப்படை பண்புகளைக் கூறிய பிறகு இரண்டாம் பகுதியில் இவை கூறப்படுவதைக் கருத்தில்கொள்ள வேண்டும். )
முதலில் தோன்றியவன் நீ
6. ய பூர்வம் தபஸோ ஜாதமத்ப்ய பூர்வமஜாயத
குஹாம் ப்ரவிச்ய திஷ்ட்டந்தம் யோ பூதேபிர் வ்யபச்யத ஏதத்வை தத்
ய-யார்; பூர்வம்-முன்னால் ; தபஸ-தவத்தினால்; ஜாத-தோன்றியவரோ; அத்ப்ய-தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கு; பூர்வம்-முன்னால்; அஜாயத-தோன்றியவரோ; ய-யார்; பூதேபி-உயிர்களின்; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிச்ய-புகுந்து; திஷ்ட்டந்தம்-உறைகிறாரோ; வ்யபச்யத-காண்கிறார்.
பொருள் : யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள்.
பிரபஞ்ச்சத்திற்கு ஆதாரமான பேருணர்வுப் பொருள் தான் நம்முள் ஆன்மாவாக உறைகிறது என்ற உண்மை இங்கே மற்றொரு கோணத்தில் கூறப்படுகிறது. பூமி, தண்ணீர், அக்கினி, காற்று, ஆகாசம்(வெளி) ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள் அதாவது ஐந்து அடிப்படைப் பொருட்கள். இந்த ஐந்தின் சேர்க்கையாலேயே உலகமும் உயிர்களும் தோன்றியுள்ளன. (ஸ்ரீமத் பகவத்கீதை (7.4-5), பக். 308-311. அவற்றிற்கு முன்பே தோன்றியவர் இறைவன். அந்த இறைவன்தான் நம்மில் ஆன்மாவாக நமது இதயக் குகையில் விளங்குகிறார்.
இறைவன் தவத்தினால் தோன்றியவர் என்று கூறுவதன்மூலம், அவரது அம்சமான ஆன்மாவை அடைய வேண்டுமானால் தவம் வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. தவத்தினால் மரணத்தையே வெல்லலாம். (கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றிலின்; ஆற்றல் தலைப்பட்ட டவர்க்கு திருக்குறள், 27.9)
என்கிறார் திருவள்ளுவர். தவம்பற்றி பகவத்கீதை விரிவாக ஆராய்கிறது. (ஸ்ரீமத் பகவத்கீதை(17. 14-19). உணவு, உடை, சுகபோகப் பொருட்கள் என்ற புறமுகமாக செலவிடப்படுகின்ற ஆற்றலைச் சுருக்கி அந்த ஆற்றலை உயர்ந்த லட்சியங்களுக்காகப் பயன்படுத்துவது தவம்.
பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி நீ
7. யா ப்ராணேன ஸம்பவதி அதிதிர் தேவதாமயீ
குஹாம் ப்ரவிச்ய திஷ்ட்டந்தம் யா பூதேபிர் வ்யஜாயத ஏதத்வை தத்
ப்ராணேன ஸம்பவதி-பிராண வடிவானவளும்; தேவதாமயீ-எல்லா தெய்வங்களின் வடிவனவளும்; பூதேபி-பஞ்ச பூதங்களுடன்; வ்யஜாயதே-தோன்றியவளும்; யா-எந்த; அதிதி-தேவி; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிச்ய-புகுந்து; திஷ்ட்டந்தீம்-உறைகிறாளோ; ஏதத்வை தத்-இதுவே அது.
பொருள் : பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்ச பூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குகையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்.
மின்சாரத்தின் ஆற்றலால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதைக் காண்கிறோம்; இன்னும் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். ஆனால் மின்சாரத்தைக் காண்பதில்லை. அதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது. இவ்வாறு எத்தனையோ செயல்களைக் காண்கிறோம். இதற்குக் காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இதனை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்:
இந்தியத் தத்துவ ஞானிகள் கொள்கைப்படி பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே........
எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியால்தான்.......... இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் சக்தியடா என்று பாடினார் பாரதியார். எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள் ஆன்மாவாக விளங்குவது போல் பிரபஞ்சத்தை இயக்குகின்ற இந்தப் பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. பிரபஞ்ச நிலையில் அந்தப் பிராணன் எல்லா தெய்வங்களின் வடிவாக, அதாவது அனைத்து ஆற்றல்களின் உறைவிடமாக, பஞ்ச பூதங்களுடன் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
ஆன்ம அக்கினி நீ
8. அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா
கர்ப இவ ஸுப்ருதோ கர்பிணீபி
திவே திவ ஈட்யோ ஜாக்ருவத்பி
ஹவிஷ்மத்பிர் மனுஷ்யேபிரக்னி ஏதத்வை தத்
அரண்யோ-அரணிக்கட்டைகளில்; நிஹித-இருக்கின்ற; ஜாதவேதா-அக்கினி; கர்பிணீபி-கருவுற்ற பெண்களால்; கர்ப இவ-கருபோல்; ஸுப்ருத-காக்கப்படுகிறது; ஜாக்ருவத்பி-விழிப்புணர்ச்சி பெற்றவர்களால்; ஹவிஷ்மத்பி; மனுஷ்யேபி; யோகிகளான மனிதர்களால் அக்னி-ஆன்ம அக்கினி; திவே திவே-நாள்தோறும்; ஈட்ய:-வழிபடப்படுகிறது.
பொருள் : கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பதுபோல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகாக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்ம அக்கினியே நீ கேட்ட பொருள்.
யாக குண்டங்களில் வளர்க்கப்படுகின்ற அக்கினி ஏற்கனவே எரிகின்ற தீயால் ஏற்றப்படுவதில்லை. யாக அக்கினி அவ்வளவு புனிதமாகக் கருதப்படுகின்றது. யாகத்திற்குத் தீ மூட்ட அரணிக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். மேலொன்றும் கீழொன்றுமாக உள்ள இரண்டு கட்டைகள் அவை. அவற்றை உரசுவதால் ஏற்படுகின்ற தீப்பொறியால் யாக அக்கினியை வளர்க்கின்றனர். அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அந்த அக்கினி கருவிற்கு ஒப்பிடப்படுகிறது. கருப்பைக்குள் கரு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது பிரமிப்பூட்டுகின்ற ஒரு விஷயமாகும். இயற்கையின் மகிமைகளின் ஒன்றாகக் கருதப்பட வேண்டியது அது. எவ்வாறு கரு வெளியில் தெரிவதில்லையோ அதுபோல் அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அக்கினியும் வெளியில் தெரிவதில்லை.
நமது ஆன்மா அந்த அக்கினிபோல் வெளியில் தெரியாததாக, கருப்பைக்குள் கரு பாதுகாக்கப்படுவது போல் இதயக் குகைக்குள் விளங்குகிறது. அரணிக்கட்டைகளை உரசும்போது எவ்வாறு அக்கினி வெளிப்படுகிறதோ அதுபோல் தியானத்தின்மூலம் யோகிகள் அந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.
ஆணையிடுபவன் நீ
9. யதச்சோதேதி ஸூர்யோ அஸ்தம் யத்ர ச கச்சதி
தம் தேவா ஸர்வே அர்ப்பிதாஸ்தது நாத்யேதி கச்சன ஏதத் வை தத்
யத- யாரிலிருந்து; ஸூர்ய-சூரியன்; உதேதி-உதிக்கிறானோ; யத்ர-எங்கே; அஸ்தம் கச்சதி ச மறைகிறானோ; தம்-அந்த இறைவனை; ஸர்வே-எல்லா; தேவா-தெய்வங்களும்; அர்ப்பிதா;-அடைகின்றனர்; தத் உ- அவரை; கச்சன-யாரும்; ந அத்யேதி-கடப்பதில்லை.
பொருள் : யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ, அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே.
பிராண சக்தி நம்மை இயக்குகிறது, பிரபஞ்சத்தை இயக்குகிறது, தெய்வமாகப் போற்றப்படுகிறது என்று 7-ஆம் மந்திரத்தில் கண்டோம். பல்வேறு விதமாகச் செயல்படுகின்ற பிராண சக்தி பல்வேறு தெய்வங்களாகக் கொண்டாடப்படுகிறது. அந்த தெய்வங்கள் அனைத்தும், அதாவது பிராண சக்தி முழுவதும் முழுமுதற்பொருளாகிய இறைவனுக்கு அடங்கியதே. அவரது ஆணையால்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அந்த இறைவனே நம்முள் ஆன்மாவாக விளங்குகிறார், அந்த ஆன்மாவை நீ என்று நசிகேதனுக்கு எமதர்மன் அறிவுறுத்துகிறான்.
இங்கே இருப்பதே அங்கே உள்ளது
10. யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததன்விஹ
ம்ருத்யோ ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பச்யதி
இஹ-இங்கே; யத் ஏவ-எதுவோ; தத்-அது; அமுத்ர-அங்கே; யத்- எது; அமுத்ர-அங்கே; தத்-அது; அனு இஹ-இங்கே; ய-யார்; இஹ-இங்கே; நானா இவ-வேறுபாடு இருப்பதுபோல்; பச்யதி-காண்கிறானோ; ஸ:-அவன்; ம்ருத்யோ-மரணத்திலிருந்து; ம்ருத்யும்-மரணத்தை; ஆப்னோதி-அடைகிறான்.
பொருள் : இங்கே எது இருக்கிறதோ அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்.
இறைவனை எங்கும் தேடி கிடைக்காமல், கடைசியில் தன்னுள்ளே கண்டதாகக் கூறுகிறார் அப்பர் பெருமான்.
(தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடிக் தேடொணா தேவனே என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்-திரு அங்கமாலை தேவாரம்.)
எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள்ளே ஆன்மாவாக விளங்குகிறார். எனவே இறைவனைத் தேட வேண்டுமானால் முதலில் நம்முள் தேட வேண்டும். இறைவனை அடைவதற்கான பாதை நம்முள்தான் இருக்கிறது.
மந்திரத்தின் இரண்டாம் வரி கருத்துச் செறிந்த ஒன்றாகும். இறைவன் என்னும் பேரொளியின் சுடர் ஒன்று நம்மில் இருக்கிறது; நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது; மனிதர்கள் என்றல்ல, மிருகங்கள், தாவரங்கள் என்று உயிரினங்கள் அனைத்திலும் இருக்கிறது. சமுதாயத்தை நாம் அணுகுவதற்கான ஒரு முக்கிய அடிப்படைக் கருத்தை இங்கே காண்கிறோம். நம் ஒவ்வொருவருள்ளும் இருப்பது ஒரே இறைவனின் அம்சம் என்றால் நம்மில் வேறுபாடு இல்லை என்றாகிறது. எனவே வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை பண்புகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
எல்லாரிலும் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்து நல்லொழுக்கத்திற்கு ஒரு சிறந்த அடிப்படை ஆகிறது. நான் ஏன் அடுத்தவனைத் துன்புறுத்தக் கூடாது? போன்ற கேள்விகளுக்கு இறைவன் நம்மைத் தண்டிப்பார் என்பதல்ல பதில்; நான் இறைவனின் அம்சம், நல்லவனாக இருப்பது என் இயல்பு என்பதே பதில். நான் எதற்காக என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்? என்னைக் கட்டாயப்படுத்துவது எது? அதுதான் இரக்கம்; எங்கும் ஒரே பொருள் உள்ளது என்ற உணர்ச்சி என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
இவ்வாறு எல்லோரிலும் இறையம்சத்தைக் கண்டு அனைவரையும், அனைத்தையும் நேசிக்காதவன் மீண்டும் மீண்டும் பிறவிக்கு உள்ளாகிறான். எங்கும் ஒரே பேருணர்வு நிலவுவதைக் காண்கின்றவன் பிறவிச் சுழலிலிருந்து விடுபடுகிறான்.
உண்மையை அறிய மனனே கருவி
11. மஜஸைவேதமாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன
ம்ருத்யோ ஸ ம்ருத்யும் கச்சதி ய இஹ நானேவ பச்யதி
இதம்-இந்த உண்மை; மனஸா-மனத்தினால்; ஆப்தவ்யம்-அடையப்படுகிறது; இஹ-இங்கே; நானா-வேறுபாடு; கிஞ்சன-எதுவும்; ந அஸ்தி- இல்லை; ய-யார்; இஹ-இங்கே; நானா இவ-வேறுபாடு இருப்பதுபோல்; பச்யதி-காண்கிறானோ; ஸ-அவன்; ம்ருத்யோ-மரணத்திலிருந்து; ம்ருத்யும்-மரணத்திற்கு; கச்சதி-செல்கிறான்.
பொருள் : இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு எதுவும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பதுபோல் யார் காண்கிறோனோ அவன் மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்கிறான்.
எங்கும் இறைவன் இருக்கிறார், நம் ஒவ்வொருவருள்ளும் இறைவனின் அம்சமே நிலவுகிறது என்ற உண்மையை அறிவதற்கு நம்மிடமுள்ள ஒரே கருவி மனம். இந்த மனம் தூயதாகும்போது, ஒன்றாகும்போது அது இந்த உண்மையை அறிவதற்கான தகுதி பெறுகிறது.
தூய மனம் என்றால் என்ன?
எண்ணங்களே எழாத ஒருங்கிணைந்த மனமே தூய மனம், அந்த மனமே உண்மையைக் காட்ட வல்லது, சற்று விளக்கமாகக் காண்போம்.
தண்ணீர் தூய்மையாக இருக்கும்போது அதில் நாம் முகம் பார்க்க முடியும். அதில் எதைக் கலந்தாலும் அதன் தூய்மை கெடுகிறது. கலப்பது பாலாக இருந்தாலும், விஷமாக இருந்தாலும் விளைவு ஒன்றுதான். நமது முகம் அதில் பிரதிபலிக்காது. அதுபோல் மனமும் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமானால் அதில் எண்ணங்களே இருக்கக் கூடாது. முதலில் நல்ல எண்ணங்களை மனத்தில் நிரப்புவதன்மூலம் தீய எண்ணங்களை விரட்ட வேண்டும். பிறகு நல்ல எண்ணங்களையும் விட்டுவிட வேண்டும். காலில் முள் ஒன்று தைத்தால் மற்றொரு முள்ளைக் கொண்டுவர வேண்டும். காலிலிருந்து முள்ளை எடுத்தபிறது இரண்டு முட்களையும் எறிந்துவிடுகிறோம். அதுபோல் அஞ்ஞான முள்ளை எடுப்பதற்கு ஞான முள்ளைத் தேட வேண்டியிருக்கிறது. அஞ்ஞானம் அழிந்ததும், ஞானம் அஞ்ஞானம் இரண்டையும் எறிந்துவிட வேண்டும் என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அதுபோலவே, மனத்தை உன்னிப்பாகக் கவனிக்கின்ற யாருக்கும் ஓர் உண்மை புரிய வரும். மனம் பல்வேறாகப் பிரிந்து கிடப்பதுதான் அது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருப்பதை நாம் உணர முடியும். ஒரு தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்ல முற்படுமானால் அதில் பயணம் செய்பவனின் கதி என்னவாகும்? மனம் பிளவுபட்டுக் கிடக்கின்ற ஒருவனின் கதியும் அதுதான். அவனால் எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. புற விஷயங்களையே செய்ய முடியாத அவனால் அக வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒருங்கிணைந்த மனம்தான் தூய மனம்.
தூய மனம் என்று கூறும்போது இந்த இரண்டு கருத்துக்களையும் மனத்தில்கொள்ள வேண்டும்.
அங்குஷ்ட்ட மாத்ர வித்யை : 12-13
இங்கே அங்குஷ்ட்ட மாத்ர வித்யை கூறப்படுகிறது. அங்குஷ்ட்டம் என்றால் பெருவிரல் இறைவன் பெருவிரல் அளவினராக இதயக் குகையில் உறைகிறார்.
12. அங்குஷ்ட்ட மாத்ர: புரு÷ஷா மத்ய ஆத்மனி திஷ்ட்டதி
ஈசனோ பூதபவ்யஸ்ய ; ததோ விஜுகுப்ஸதே ஏதத் வை தத்
அங்குஷ்ட்ட மாத்ர-பெருவிரல் அளவில்; புருஷ-இறைவன்; ஆத்மனி-உடம்பின்; மத்யே-நடுவில்; திஷ்ட்டதி-இருக்கிறார்; பூத பவ்யஸ்ய-இறந்த மற்றும் எதிர்காலங்களுக்கு; ஈசான-தலைவர்; தத-இந்த அறிவினால்; ந விஜுகுப்ஸதே-வெறுப்பதில்லை.
பொருள் : எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே.
13. அங்குஷ்ட்டமாத்ர புரு÷ஷா ஜ்யோதிரிவாதூமக
ஈசானோ பூதபவ்யஸ்ய ஏவாத்ய ஸ உச்வ ஏதத் வை தத்
அதூமக-புகையற்ற; ஜ்யோதி: இவ-ஒளி போல்; அங்குஷ்ட்டமாத்ர-பெருவிரல் அளவில்; புருஷ-இறைவன்; பூத பவ்யஸ்ய-இறந்த மற்றும் எதிர்காலங்களுக்கு; ஈசான-தலைவர்; ஸ ஏவ-அவரே; அத்ய-இப்போது; ஸ உ- அவரே; ச்வ-பின்னர்.
பொருள் : எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவருமான இறைவன் புகையற்ற ஒளிபோல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே, என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே நீ கேட்ட பொருள் அவரே.
இறைவன் நம் இதயத்தில் ஆன்மாவாக விளங்குகின்ற நிலையில் அவருக்கு இங்கே ஒரு பரிமாணம் கூறப்படுகிறது. ஆன்மா பெருவிரல் இருப்பதாக இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
அளவில் பெரியதாக இருக்கின்ற மரத்தைப் புகைப்படம் எடுத்தால் அது அந்த புகைப்படச் சுருளின் அளவினதாக இருக்கும். அதுபோல், இதயத்தில் இஷ்டதெய்வத்தை தியானிக்கும்போது, ஆரம்ப காலங்களில் சிறிய உருவத்தையே தியானிக்க முடியும். இவ்வாறு தியானத்திற்கு வசதியாக இருப்பதைக் குறிப்பிடுவதற்காக பெருவிரல் அளவு என்று கூறப்பட்டுள்ளது.
அளவில் சிறியதாக இருப்பதால் அது ஆன்மா அல்ல, இறைவனின் அம்சம் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே 13-ஆம் மந்திரம் அதனை ஒளி என்று குறிப்பிடுகிறது. சிறிய பொருளின் ஒளி சிறியதாக இருக்கும், பெரிய பொருளின் ஒளி பெரியதாக இருக்கும் என்று எந்த நியதியும் கிடையாது; சிறிய நவீன மின்விளக்குகள் பெரிய அரங்கங்களை ஒளிரச் செய்வதைக் காண்கிறோம். அது போல் பெருவிரல் அளவுடைய இந்த ஆன்மாவும் உணர்வுப் பேரொளியால் உடம்பையும் மனத்தையும் ஒளிரச் செய்கிறது.
புகையற்ற ஒளி என்பதும் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஒரு பொருள் எரிவதால் ஒளி உண்டாகிறது.
அந்தப் பொருளின் தன்மையைப் பொறுத்து புகை அதிகமாக இருக்கலாம், குறைவாக இருக்கலாம்; சில வேளைகளில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக்கூட இருக்கலாம். ஆனால் புகை இருந்தே தீரும். புகையற்ற ஒளி என்றால் அது எதையும் சாராத ஒளி என்பது பொருள்.
இறைவனின் அம்சமான இத்தகைய ஒளிப் பொருள் நம்மில் உள்ளது. அதை உணர்ந்தவன் மரணத்தை வெல்கிறான் என்று நசிகேதனுக்கு உணர்த்துகிறான் எமதர்மன்.
உண்மையை அறியாதனும் அறிந்தவனும் : 14-15
14. யதோதகம் துர்கே வ்ருஷ்ட்டம் பர்வதேஷ விதாவதி
ஏவம் தர்மான் ப்ருதக் பச்யன்ஸ்தானேவானுவிதாவதி
பர்வதேஷு-மலைகளில்; துர்கே-உயர்ந்த பகுதியில்; வ்ருஷ்ட்டம்-பெய்த; உதகம்-மழை நீர்; யதா-எவ்வாறு; விதாவதி-ஓடிவிடுகிறதோ; ஏவம்-அவ்வாறு; தர்மான்-உயிரினங்களை; ப்ருதக்-வேறாக; பச்யன்-காண்பவன்; தான் ஏவ-அவற்றையே; அனுவிதாவதி-பின்பற்றி ஓடுகிறான்.
பொருள் : மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவ்வேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்.
இறைவன் ஆன்மாவாக நம்மில் உறைகிறார் என்று கண்டோம். எல்லோரிலும் உள்ளது. இறையம்சம் என்றால் வேறுபாட்டுக்கு இடமேது? வேறுபாடு காண்பவன் உண்மையை அறியவில்லை. உண்மையை உணராததால் மீண்டும் மீண்டும் பிறப்புக்கு உள்ளாகிறான். இந்தக் கருத்தை 10 ஆம் மந்திர விளக்கவுரையில் விரிவாகக் கண்டோம்.
15. யதோதகம் சுத்தே சுத்தம் ஆஸிக்தம் தாத்ருகேவ பவதி
ஏவம் முனேர் விஜானத ஆத்மா பவதி கௌதம
கௌதம-நசிகேதா; சுத்தே-தெளிந்த நீரில்; ஆஸிக்தம்-விடப்பட்ட; சுத்தம்-தெளிந்த; உதகம்-நீர்; யதா-எவ்வாறு; தாத்ருக் ஏவ-அதுவாகவே; பவதி-ஆகிறதோ; ஏவம்-அவ்வாறு; விஜானத-உண்மையை உணர்ந்த; முனே-மகானின்; ஆத்மா-ஆன்மா; பவதி-ஆகிறது.
பொருள் : நசிகேதா தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாகவே ஆகிறார்.
குளவியை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கின்ற புழு கடைசியில் குளவியாகவே மாறிவிடுகிறது என்பதை நீ கேட்டதில்லையா? என்று விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். நான் ஆன்மா என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கும்போது நான் ஆன்மா என்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.
இதி காடக உபநிஷதி த்விதீயாத்யாயே ப்ரதமா வல்லீ