ஒரு பணக்காரருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தந்தையின் சொல்லை மதிப்பவன். வயல் வேலைகளை அக்கறையுடன் செய்வான். இளையவன் தந்தையுடன் சண்டையிட்டு தன் பங்கு சொத்தை பெற்றான். தகாத நட்பால் சொத்துக்களை விற்று ஆடம்பரமாகச் செலவழித்தான். நண்பர்கள் விலகினர். பக்கத்து நாட்டுக்கு போய் பன்றி மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டான். வருமானம் போதவில்லை. ”என் தந்தையிடம் பணியாற்றும் கூலியாட்கள் கூட வயிறார சாப்பிடுகின்றனர். ஆனால் நான் பசியுடன் வாடுகிறேனே” என வருந்தினான் தந்தையிடம் மன்னிப்பு கேட்டான். கட்டியணைத்த தந்தை பணியாட்களை அழைத்தார். “இவனுக்கு உயர்ந்த ஆடைகள், மோதிரம், காலணியை அணிவியுங்கள்” என்றார். விருந்துக்கும் ஏற்பாடு செய்தார்.
மூத்த மகன் வீட்டுக்கு வந்தான். தம்பிக்கு நடக்கும் வரவேற்பைக் கண்டு வருந்தினான். வீட்டுக்குள் நுழைய மனமின்றி தவித்தான். ”இவனுக்கா வரவேற்பு கொடுக்கிறீர்கள்? தந்தையே... நீங்கள் சொன்ன பணிகளை சரிவர செய்கிறேன். எனக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் விருந்துண்ண ஒரு ஆட்டுக்குட்டியாவது கொடுத்ததுண்டா?” எனக் கேட்டான். ”மகனே! நீ என்னுடன் இருக்கிறாய். இந்த சொத்து உன்னுடையது. உன் சகோதரன் புதுவாழ்வு தேடி வந்துள்ளான். அதை எண்ணி மகிழ்வோமே” என்றார். இதன் மூலம் தவறான பாதையில் சென்று மனம் திருந்தியவர்களை அரவணைக்க வேண்டும்.