திருச்செந்தூர் கடற்கரையில் அலைமோதிய பக்தர்கள்; தர்ப்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 10:07
தூத்துக்குடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை யைமுன்னிட்டு ஏராளமானோர் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தால் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைந்து அவர்களுடைய ஆசி எப்பொதும் அவரவர் குடும்பங்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆடி அமாவாசை தினத்தன்று ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை, மற்றும் துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் காலையிலே திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதைப்போல் தாமிரபரணி ஆற்றங்கரைகளான ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆத்தூர் உட்பட பல இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்: இதைப்போல் திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது, 4.30 மணிக்கு விஸ்வரூப தா‘சனமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து கால சாந்தி பூஜையாகி தீர்த்தவாரியும், மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி தரிசனமும் செய்தனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.